திருச்சி: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் களைகட்டியுள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் திருச்சி மாநகராட்சிக்கு உள்பட்ட 65 வார்டுகளில் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் இன்று (பிப் 03) திருச்சி மாநகராட்சிக்கு உள்பட்ட ஸ்ரீரங்கம் பகுதியிலுள்ள வார்டுகளில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
முன்னதாக ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு வேட்பாளர்களுடன் பாஜகவினர் வெடி வெடித்து ஊர்வலமாக வந்தனர்.
தடுத்து நிறுத்திய காவல் துறை
அப்போது வேட்புமனு தாக்கல் செய்யும் ஸ்ரீரங்கம் கோட்டம் அலுவலகம் முன்பு 200 மீட்டர் தொலைவில் அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். ஆனால் காவல் துறையினர் தடுப்பையும் மீறி, பாஜகவினர் ஸ்ரீரங்கம் கோட்டம் அலுவலகம் வந்து வேட்பாளருடன் நான்கு பேர் செல்ல வேண்டும் எனக் கேட்டனர்.
இதற்கு காவல் துறையினர் அனுமதி மறுத்ததால், பாஜகவினர் காவல் துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் திமுக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யும்போது அதிக நபர்கள் செல்லும்போது, அவர்களை தடுக்காத காவல்துறையினர் பாஜகவினரை மட்டும் தடுப்பது ஏன் எனக்கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தேர்தல் நடத்தை விதிமுறைகளைப் பின்பற்றி நடக்க வேண்டும் என பாஜகவினருக்கு அறிவுறுத்தி, வேட்பாளருடன் இரண்டு பேரை மட்டும் காவல் துறையினர் அனுமதித்தனர்.
பின்னர் திருச்சி மாநகராட்சிக்கு உள்பட்ட 2ஆவது வார்டில் பாஜக வேட்பாளர் கோவிந்தன், 3ஆவது வார்டு பாஜக வேட்பாளர் லீமா ரோஸ்லின் ஆகியோர் ஸ்ரீரங்கம் கோட்ட உதவி ஆணையர் அக்பர் அலியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
இதையும் படிங்க: நீட் தேர்வுக்கு விலக்கு கொண்டு வர முயற்சியுங்கள் - கோரிக்கை வைத்த ஆந்திர மாணவருக்கு செவிமடுத்த முதலமைச்சர் ஸ்டாலின்