திருச்சி: திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கத்தில் 'ரோஜ்கர் மேளா திட்டம்' என்ற வேலைவாய்ப்பு விழா நடைபெற்றது. இதில் வங்கிகள், சுங்கத்துறை, இரயில்வே துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு பணி நியமன ஆணைகளை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வழங்கினார்.
பின்னர் விழா மேடையில் பேசிய அவர், "மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள இடங்கள் குறித்து பிரதமர் மோடி கடந்த வருடம் ஜூன் மாதம் ஆய்வு நடத்தினார். அப்போது பல்வேறு துறைகளில் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அடுத்த 18 மாதங்களில் பத்து லட்சம் பேருக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டார் என்றார்.
மேலும், கடந்த ஆகஸ்ட் மாதம் சுதந்திர தின விழாவில் ஒரு வருடத்தில் பத்து லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாத பிரதமர் மோடி அறிவித்தார். தற்போது இந்த வருடத்தில் மட்டும் 4.20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு மத்திய அரசு வழங்கி உள்ளது மீதமுள்ள வேலைவாய்ப்புகள் விரைவில் வழங்கப்படும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், பாஜக மற்றும் கூட்டணியில் உள்ள அனைத்து மாநிலத்திலும் வேலைவாய்ப்பு முகாம் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. இந்த நிலையில் இன்றைய தினம் பணி நியமன ஆணையை பெறும் இளைஞர்கள், வரும் தலைமுறையினர்க்கு முன்னுதாரனமாகவும், அவர்களை வழிநடத்தும் அதிகாரிகளாக சிறப்பாக செயல்பட வேண்டும்.
2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பாஜக அரசு கடந்த ஒன்பது ஆண்டுகளில் நெடுஞ்சாலை துறை, விமான நிலையம் கட்டமைப்பு, இந்தியாவின் டெக்ஸ்டைல்ஸ் துறையில் பெரும் கட்டமைப்பை ஏற்படுத்துதல் போன்ற பல துறைகளில் மகத்தான சாதனை புரிந்து வருகிறது. பாஜக ஆட்சிக்கு வரும் போது மெட்ரோ ரயில் திட்டமானது 5 நகரங்களில் இருந்தது. தற்போது 27 நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுகிறது.
எழைகளின் அரசாக பாஜக அரசு விளங்கி வருகிறது. குறிப்பாக 'அனைவருக்கும் வீடு' வழங்கும் திட்டத்தை நிறைவேற்றி வருகிறது. வீட்டிற்கு வீடு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 80 கோடி பேருக்கு ரேஷன் கார்டு மூலம் இலவசமாக அரிசி வழங்கப்படுகிறது. புதிய தேசிய கல்வி கொள்கை அடிப்படையில் தாய்மொழியில் கல்வி கற்க வேண்டும் என்பது கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த கொள்கையானது சர்வதேசத்துக்கு இணையாக கல்வி கொள்கையாக உள்ளது. குறிப்பாக அடுத்த 25 ஆண்டுகள் நாம் அனைவரும் இணைந்து நாடு முன்னேற செயல்படுவோம்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க:3 நாட்கள் வரை செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை தேவைப்படும் - மருத்துவமனை தகவல்