திருச்சி: திமுக அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் 2012 ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி அதிகாலை வீட்டில் இருந்து வாக்கிங் சென்றபோது கடத்தப்பட்டார். அதன் பின்னர், திருச்சியில் இருந்து கல்லணை செல்லும் சாலையில் காவிரி ஆற்றின் கரை ஓரமாகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கில் குற்றவாளிகளைப் பிடிக்க 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று (ஏப்.13) ராமஜெயம் கொலை சம்பவம் நடந்த கல்லணை சாலைக்கு சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர் நேரில் சென்று விசாரணை நடத்தினார். கல்லணை ரோட்டில் கொலை நடந்த இடத்துக்குச் சென்றார்.
அங்கு ராமஜெயம் உடல் கிடந்த நிலை, சாலையில் இருந்து எவ்வளவு தொலைவில் உடல் கிடந்தது ? என்ற விவரங்களை உடன் கொண்டு வந்த புகைப்படங்களை வைத்து ஒப்பிட்டு ஆய்வு நடத்தினார். பின்னர் திருவெறும்பூரில் உள்ள ராமஜெயம் சிறப்பு புலனாய்வு குழு அலுவலகத்துக்குச் சென்று அங்கிருந்த அனைத்து ஆவணங்களை ஒரு மணி நேரத்துக்கும் மேல் ஆய்வு செய்தார்.
2017 ஆம் ஆண்டு சிபிஐக்கு வழக்கு மாற்றப்பட்டு தற்போது சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவின் பேரில் வழக்கு மீண்டும் மாநில அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. எஸ்பி ஜெயக்குமார், டிஎஸ்பி மதன் கட்டுப்பாட்டில் 40க்கும் அதிகமான காவல்துறையினர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர் நேற்று (ஏப்.13) மதியம் கார் மூலம் திருச்சி வந்து விசாரணை மேற்கொண்டு மீண்டும் சென்னைக்கு உடனடியாக புறப்பட்டுச் சென்றார். இதனால், இந்த வழக்கு மீண்டும் விறுவிறுப்பை எட்டியுள்ளது
இதையும் படிங்க: அடுத்த 20 ஆண்டுகளுக்கு திமுக அரசை யாராலும் அசைக்க முடியாது - அமைச்சர் கே.என். நேரு