தமிழ்நாடு முழுவதும் பரவலாகப் பெரியார், அண்ணா, காமராஜர், அம்பேத்கர், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் உள்ளிட்ட தலைவர்கள் சிலை அமைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, தென் மாவட்டங்களில் உள்ள தலைவர்களின் சிலைகள் அவ்வப்போது சமூக விரோதிகளால் அவமதிக்கப்பட்டு, உடைக்கப்படும் சம்பவங்கள் நடந்துள்ளன.
இதுபோன்ற சம்பவங்களால் பெரியளவில் கலவரம் வெடித்த வரலாறும் உள்ளது. இதற்கு முடிவுகட்டும் விதமாக, தலைவர்களின் சிலைக்கு கூண்டு அமைத்து பூட்ட நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
இதனடிப்படையில் தென்மாவட்டங்களில் பெரும்பாலான தலைவர்களின் சிலைக்கு கூண்டு அமைக்கப்பட்டுள்ளது. அந்தவரிசையில் திருச்சியிலும் தலைவர்களின் சிலைக்கு கூண்டு அமைக்கும் பணி தொடங்கியது.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலை, அரிஸ்டோ ரவுண்டானாவில் உள்ள அம்பேத்கர் சிலை ஆகியவற்றுக்கு கூண்டு அமைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு கூண்டு அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இச்சூழலில் திருச்சி மரக்கடை பகுதியில் மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர் சிலை உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக, மரக்கடையில் உள்ள எம்ஜிஆர் சிலை துணியால் மூடப்பட்டது. தேர்தல் முடிந்ததும் துணியை அகற்றும் பணி நடைபெற்றது. அப்போது எதிர்பாராதவிதமாக எம்ஜிஆர் சிலையின் கைப்பகுதி உடைந்து விழுந்தது.
இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அடையாளம் தெரியாத நபர்கள் சிலையை உடைத்ததாகத் தகவல் பரவியது.
பின்னர் நடத்திய விசாரணையில் துணி அகற்றும்போது சிலையின் கைப்பகுதி உடைந்தது தெரியவந்துள்ளது. தற்போது இச்சிலையை சுற்றி கூண்டு அமைக்கும் நணி நடைபெற்று முடிந்துள்ளது. திருச்சியில் பெரியார், அம்பேத்கர் சிலையைத் தொடர்ந்து, எம்ஜிஆர் சிலைக்கு கூண்டு அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரை ஒதுங்கிய 40 கிலோ கஞ்சா: போலீஸ் விசாரணை!