திருச்சி: மணப்பாறை வாரச்சந்தை நடைபெறும் பகுதியில் புதிதாக கடை மற்றும் கட்டடங்கள் கட்டும் பணி கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணிக்கான ஒப்பந்தத்தை ஆனந்த் என்பவர் எடுத்து, அப்பணியை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் கட்டுமானப்பணிகளை நகராட்சி பொதுப்பணித்துறை மேற்பார்வையாளர் ராஜேஷ் என்பவர் நேரில் சென்று பார்வையிட்டபோது, பணிகள் சரிவர முறையாக நடைபெறவில்லை எனக்கூறியுள்ளார். இது சம்பந்தமாக நகராட்சி அலுவலருக்கும், ஒப்பந்ததாரருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது நகராட்சி பொதுப்பணித்துறை மேற்பார்வையாளர் ராஜேஷை, ஒப்பந்ததாரர் ஆனந்த் தகாத வார்த்தைகளால் திட்டி உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் மிரட்டிப் பேசியுள்ளார்.
இது குறித்த காணொலி சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், ஒப்பந்ததாரர் மீது நகராட்சி பொதுப்பணித்துறை மேற்பார்வையாளர் ராஜேஷ் மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: புஞ்சை புளியம்பட்டி சந்தை - ரூ.1.50 கோடிக்கு கால்நடைகள் விற்பனை