இது தொடர்பாக திருச்சி பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களை சந்தித்த அலுவலர்கள் சங்க பொதுச் செயலாளர் சிவக்குமார் கூறுகையில், "பிஎஸ்என்எல் கடனில் மூழ்கியுள்ளது. விரைவில் மூடப் போகிறார்கள் என்று அவதூறு பரப்பப்படுகிறது. பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 19 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே கடன் உள்ளது. ஆனால் ரிலையன்ஸ், ஜியோ நிறுவனம் 25 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்டது. தற்போது அந்த நிறுவனத்திற்கு ரூ.1.50 லட்சம் கோடி வங்கி கடன் உள்ளது. இதேபோல் ஏர்டெல் நிறுவனத்திற்கு ரூ.1.68 லட்சம் கோடியும், வோடபோன் நிறுவனத்துக்கு ரூ.1.18 லட்சம் கோடியும் கடன் உள்ளது. இதன் மூலம் அதிக கடன் சுமையில் யார் இருக்கிறார்கள் என்பது தெளிவாக புரியும் என்றார்.
அதையடுத்து, உறுதி அளித்தபடி இங்கு செய்யப்படும் சேவைகளுக்கான கட்டணத்தை மத்திய அரசு வழங்கவில்லை. இதற்கான 2 ஆயிரம் கோடியும் மற்றும் அலைக்கற்றைக்கான தொகை 50 ஆயிரம் கோடியும் மத்திய அரசு வழங்கவில்லை. அனைத்து அரசுத் திட்டங்களும் பிஎஸ்என்எல் மூலமாகவே மேற்கொள்ளப்படுகிறது. அதனால் 2000ம் ஆண்டு முதல் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும். இதன் மூலம் தான் பிஎஸ்என்எல் நிதி ஆதாரத்தை உருவாக்க முடியும்.
தற்போது பணியில் உள்ள அனைத்து தொழிலாளர்களையும் வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்றால் 1.20 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும். இதை வழங்க மத்திய அரசு முன்வராது. அதோடு பிஎஸ்என்எல் நிறுவனத்தை புதுப்பிக்கும் வகையில் புதிதாக திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது. இதன் மூலம் பிஎஸ்என்எல் சொத்துக்களை விற்பனை செய்தோ, அடமானம் வைத்தோ, கூட்டாண்மை மூலமும் வருவாய் ஈட்டக் கூடிய திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு விரைந்து 4ஜி சேவையை வழங்க வேண்டும். பணி பாதுகாப்பு, பென்ஷன், ஓய்வு பெறும் வயது 60 உள்ளிட்ட எங்களது கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும்" என்றார்.