கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் கடந்த மாதம் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. பெரும்பாலான மக்கள் வீட்டிற்குள்ளேயே தனிமைப்படுத்திக் கொண்டாலும், தினமும் வீடு தேடி வந்து குப்பைகளை வாங்கியும், சாலைகள் பொது கழிப்பிடங்கள் அவற்றை தூய்மை செய்யும் பணியில் தூய்மைப் பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
திருச்சி மாநகராட்சிப் பகுதியில் உள்ள 65 வார்டுகளில் 1,500 நிரந்தரப் தூய்மைப் பணியாளர்கள், ஆயிரம் தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு கையுறை, முகக் கவசம், கிருமி நாசினி உள்ளிட்டவை அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளன.
ஊரடங்கு நடைமுறை காலத்திலும் தொடர்ந்து குடியிருப்புகள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் என அனைத்து பகுதிகளிலும் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களை போற்றும் வகையில் திருச்சி மாநகரில் பீமநகர் பகுதியில் பாஜக இளைஞர் அணி சார்பில் பாத பூஜை நடத்தப்பட்டது.
மாவட்ட தலைவர் கவுதமன் தலைமையில் பீமநகர் பகுதி மாநகராட்சி கண்காணிப்பாளர், தூய்மைப் பணியாளர்களுக்கு மலர் தூவி, பாத பூஜை செய்து, மாலை அணிவித்தனர். பின்னர் அவர்களுக்கு வேட்டி, சேலை மற்றும் காய்கறி தொகுப்புகளையும் வழங்கினர்.
இது போன்ற அங்கீகாரம், பாராட்டு எங்களை சோர்வில்லாமல் பணியாற்ற ஊக்கப்படுத்துவதாக தூய்மைப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், சமையல் காஸ் சிலிண்டர் டெலிவரி செய்யும் தொழிலாளர்களும் பாராட்டி கவுரவிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: மருத்துவமனையில் 430 பேரை திரட்டி பாராட்டு விழா நடத்திய பாஜக!