திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடம் ஆறு பிரிகிறது. இந்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பழமையான தடுப்பணையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது உடைப்பு ஏற்பட்டது. இதனால் தடுப்பணையின் 6ஆவது மதகு முதல் 14ஆவது மதகுகள்வரை உள்ள ஷட்டர்கள் உடைந்தன.
இதனால் பல லட்சம் கன அடி தண்ணீர் வெளியேறி கடலில் கலந்து வீணானது.
உடைந்த தடுப்பணைக்கு மாற்றாக ரூ.380 கோடி மதிப்பீட்டில் புதிய தடுப்பணை அமைக்கும் பணி தற்போது நடந்துவருகிறது. இதற்காக ஆற்றில் தூண்கள் அமைக்கப்பட்டுவருகின்றன.
இந்த பணிகள் முடிவடைந்து பயன்பாட்டிற்கு வர சில ஆண்டுகள் ஆகும் என்பதால் அதற்கு முன்னதாக உடைப்பு ஏற்பட்ட பகுதியில் தற்காலிக தடுப்பணை அமைக்கும் பணி ரூ.39 கோடியில் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. கடந்த ஆண்டு வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட பின்னர் பெரிய அளவில் நீர் வரத்து இல்லாததால் உடைப்பு ஏற்பட்ட தடுப்பணையால் எவ்வித பிரச்னையும் ஏற்படாமல் இருந்தது. இந்த நிலையில், மேட்டூர் அணையில் இருந்து தற்போது தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் முக்கொம்பு தடுப்பணையில் ஏற்பட்டுள்ள உடைப்பு வழியாக தண்ணீர் வெளியேறி வீணாக கடலில் கலந்துவிடும் என்று விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
இது பற்றி பேசிய தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு, ’வறட்சி என்றாலும் வெள்ளம் என்றாலும் பாதிப்பது விவசாயிகளுக்கே ஏற்படுகிறது. 5 கோடி ரூபாயில் முடிக்க வேண்டிய தற்காலிக தடுப்பணை பணிக்கு 39 கோடி ரூபாயை செலவு செய்தும் இன்னும் பணி முடியாமல் இருப்பது வேதனை அளிக்கிறது’ என்றார்.
இது குறித்து பேசிய பொதுப்பணித் துறை ஆற்றுப்பாசன கோட்டம் உதவி செயற்பொறியாளர் ஜெயராமன், ’தற்காலிக தடுப்பணை அமைக்கும் பணி முடுக்கிவிடப்பட்டு, இரவு பகலாக 250 தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காவிரியில் தண்ணீர் வரத்து அதிகரித்தால் தடுப்பணை சேதமடையும் வாய்ப்பு இருக்கும் என்பதால், தற்போது மணலின் மேற்பரப்பில் சுமார் 1 அடி உயரத்திற்கு கான்கிரீட் தளம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுவருகிறது. 90 விழுக்காடு பணிகள் முடிவடைந்துள்ளது. தற்போதைய சூழலில் 2 லட்சம் கன அடிவரை தண்ணீர் வந்தால் தற்காலிக தடுப்பணை தாங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது’ என்றார்.
மேட்டூரில் திறக்கப்படும் அதிகப்படியான தண்ணீர் இன்னும் ஒரு சில நாட்களில் திருச்சி முக்கொம்பு மேலணையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் தற்காலிக தடுப்பணைகள் மூலம் தண்ணீர் கடலில் கலப்பதை தடுத்து விவசாய பயன்பாட்டிற்கு முழு அளவில் பயன்பட வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.