நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும், விவசாய விளைப்பொருட்களுக்கு லாபகரமான விலை கொடுக்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை தடைசெய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 26,27aam தேதிகளில் தலைநகர் டெல்லியில் போராட்டமும், உள்துறை அமைச்சர் அமித்ஷா வீட்டின் முன்பு உண்ணாவிரதம் இருக்கவும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு முடிவு செய்திருந்தார்.
அவரது தலைமையில் 500க்கும் மேற்ப்பட்ட விவசாயிகள் ரயில் மூலம் டெல்லி செல்ல திட்டமிட்டிருந்தனர். இதற்க்காக திருச்சி ரயில் நிலையத்திற்கு இன்று காலை அய்யாக்கண்ணு அவரது வீடு அமைந்துள்ள திருச்சி-கரூர் பைபாஸ் சாலை அண்ணாமலை நகரில் இருந்து விவசாயிகளுடன் புறப்பட்டார். இதன் காரணமாக அந்த பகுதியில் ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
தொடர்ந்து அய்யாக்கண்ணு பயணம் செய்தால் அவரை கைது செய்ய காவல் துறையினர் தயாராக இருந்தனர். இதன் காரணமாக அய்யாக்கண்ணு வீட்டை விட்டு வெளியில் வராமல் வீட்டினுள்ளேயே இருக்கிறார். வீட்டை சுற்றி காவலர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால் திருச்சியில் பரபரப்பு நிலவுகிறது. மேலும் திருச்சி ரயில் நிலையத்திலும் நூற்றுக்கணக்கான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அங்கு வரும் விவசாயிகளை கைது செய்வதற்கு அவர்கள் ஆயத்தமாக உள்ளனர்.