திருச்சியில் ஜூன் 22, 23ஆம் தேதிகளில் மாநில தடகளப் போட்டிகள் நடைபெறுகின்றன. இது குறித்து திருச்சி மாவட்ட தடகள சங்க உப தலைவரும், மாநகர காவல் துறை துணை ஆணையருமான மயில்வாகனம் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஜூன் 22, 23ஆம் தேதிகளில் 92ஆவது தமிழ்நாடு மாநில தடகளப் போட்டிகள் நடக்கின்றன. திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நியூரோ ஒன் மருத்துவமனை சார்பில் தமிழ்நாடு மாநில தடகள சங்கம் ஒருங்கிணைப்பில் திருச்சி மாவட்ட தடகள சங்கத்தினரால் இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன.
100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 800 மீட்டர், 1,500 மீட்டர், 5,000 மீட்டர், 10,000 மீட்டர், 20 கிலோ மீட்டர் நடை போட்டி, 110 மீட்டர், 400 மீட்டர் தடை ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், மும்முறைத் தாண்டுதல், கோலூன்றித் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், சங்கிலி குண்டு எறிதல் போன்ற 23 வகையான போட்டிகள் ஆண்களுக்கும், 22 வகையான போட்டிகள் பெண்களுக்கும் நடைபெற உள்ளது.
வெற்றி பெறுபவர்களுக்கு பதக்கங்களுடன் கூடிய சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. போட்டிக்கான நுழைவுப் படிவம் தமிழ்நாடு தடகள சங்க இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆண்கள், பெண்கள் பிரிவு ஒட்டுமொத்த புள்ளிகள் அடிப்படையில் சாம்பியன்ஷிப், இரண்டாம் இடம் பிடிப்போருக்கு வழங்கப்படும். ஒட்டுமொத்த சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கு புள்ளிகளின் அடிப்படையில் சிறப்புப் பரிசு வழங்கப்படும்.
இப்போட்டியில் தகுதிபெறும் சிறந்த வீரர், வீராங்கனைகள் கொல்கத்தாவில் நடைபெறவுள்ள அனைத்து மாநில தடகளப் போட்டிகள், அக்டோபர் மாதத்தில் பெங்களூருவில் நடைபெறும் தேசிய விளையாட்டுப் போட்டிக்கு தேர்வு செய்யப்படுவர்.
சுமார் 1,300 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போட்டி திருச்சியில் நடைபெறுகிறது" என்றார்.