திருச்சி: இலங்கை கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை உவா மாகாண முன்னாள் முதலமைச்சரும், ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்க கௌரவத் தலைவருமான செந்தில் தொண்டைமான் திருச்சிக்கு வருகை தந்தார். திருச்சி மத்தியப்பேருந்து நிலையம் அருகே உள்ள மிளகு பாறையில் இலங்கை கிழக்கு மாகாண ஆளுநராக பொறுப்பேற்றதற்காக பாராட்டு விழா மற்றும் கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஜல்லிக்கட்டுப் பாதுகாப்பு நலச்சங்கத்தின் மாநிலத் தலைவர் ஒண்டிராஜ் தலைமையில் இலங்கை ஆளுநருக்கு மாலைகள் மற்றும் சால்வைகள் அணிவித்தும், பூரண கும்ப மரியாதை கொடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் ஜல்லிக்கட்டுப் பாதுகாப்பு நலச் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆளுநரைச் சந்தித்து சால்வை அணிந்து வாழ்த்து தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து இலங்கை ஆளுநர் செந்தில் தொண்டைமான் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், ''ஒவ்வொரு பாதையில் நமது பயணங்கள் இருந்தாலும் தமிழர்கள் என்ற கலாசாரத்தில் ஒன்றாகத் தான் இருப்போம். 15 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு பாதுகாப்புக்காக எங்கள் அமைப்பு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து அனைவரும் பயணிப்போம், உழைப்போம், உதவிகளும் செய்து கொண்டு இருப்போம்.
இதையும் படிங்க: தமிழரின் தொன்மையானது வெளிச்சம் பெற்றுக்கொண்டே இருக்கப்போகிறது - முதலமைச்சர் பெருமிதம்
தமிழக மீனவர்களைப் பொறுத்தவரையிலும் 25 ஆண்டுகளாக கைது செய்யப்பட்டு கொண்டிருக்கும்போது ஒவ்வொரு முறையும் நாங்கள் தான் அரசிடம் பேசி அவர்களை விடுதலை செய்து வருகிறோம். தமிழக மீனவர்கள் யாரும் வேண்டுமென்று இலங்கை கடல் பகுதிக்கு வருவதில்லை. கடல் எல்லை இல்லாததால், மீன்களைத் தேடி வரும் போது தவறுதலாக வருகிறார்கள்.
அந்த அடிப்படையில் தொடர்ந்து அவர்களை விடுதலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான படகுகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டு வருகிறார்கள். தொடர்ந்து அந்த வேலையைச் செய்வோம். இலங்கைத் தமிழர்கள் குடியுரிமை தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் தான் விளக்கம் கூற வேண்டும்.
இது சம்பந்தமாக சென்னையில் நடைபெற உள்ள செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் கூற உள்ளேன். இலங்கை வெளியுறவு கொள்கை தோல்வி அடைந்தது குறித்து மனோ கணேசன் கூறிய கருத்திற்கு அவரிடம் தான் விளக்கம் கேட்க வேண்டும். மேலும், இலங்கையில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துவதற்கான ஏற்பாடுகளை விரைவில் மேற்கொள்வோம், அதுமட்டுமில்லாமல் இலங்கை முழுவதும் ஆசிரியர் பற்றாக்குறை இருந்து வருகிறது. அதனை சரி செய்து வருகிறோம்'' என்றார்.
இதையும் படிங்க: தஞ்சை பெரியகோயிலில் விமரிசையாக நடைபெற்ற திருக்கல்யாணம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்