விருதுநகர் மாவட்டம் சிவகாசி திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் அழகர் சாமி (33) திருமணமாகாதவர்.
திருச்சி மாநகர ஆயுதப்படை மோப்பநாய் பிரிவில் காவலராக பணியாற்றிய அழகர் சாமி, திருச்சி கே.கே.நகர் பகுதியில் உள்ள மாநகர ஆயுதப்படை குடியிருப்பில் வசித்துவந்தார்.
இந்நிலையில் இன்று (செப்.18) அதிகாலை இவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற கே.கே நகர் காவல் துறையினர் அழகர் சாமியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காகத் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றைக் காவல் துறையினர் கைப்பற்றினர். அதில், "தனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என்றும், மன அழுத்தம் காரணமாகவே தற்கொலை செய்துகொண்டதாக" குறிப்பிட்டுள்ளார். இது குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.