கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமுடக்கத்தை அரசு அறிவித்துள்ளது. அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 25) அந்தந்த மாவட்ட எல்லைப்பகுதிகள் மூடப்பட்டு காவல் துறையினர் வாகனத்தணிக்கையில் ஈடுப்பட்டனர். இந்நிலையில், திருச்சி - புதுக்கோட்டை மாவட்ட எல்லைப் பகுதியான ஆண்டியப்பட்டி சோதனைச்சாவடியில் வளநாடு உதவி ஆய்வாளர், இரண்டு காவல் துறையினருடன் பணியில் இருந்தார்.
அப்போது அவ்வழியாக மணப்பாறையிலிருந்து விராலிமலையை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரை காவல் உதவி ஆய்வாளர் கை நீட்டி நிறுத்த முயன்றார். இதில் உதவி ஆய்வாளரின் கை இளைஞர் மீது லேசாக மோதி விட, காவல் துறையினர் தன்னை அடித்ததாகக் கூறி, இளைஞர் சக நண்பர்களை அழைத்து வந்து காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் அவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்யாமல் அனுப்பிவைத்தனர்.
இந்நிலையில் அப்போது எடுக்கப்பட்ட காணொலியானது மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டதையடுத்து, அவரது உத்தரவின் பேரில், தகராறில் ஈடுபட்ட ஆண்டியப்பட்டியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி, புதுக்கோட்டை மாவட்டம் பாமாலைப்பட்டியைச் சேர்ந்த அருண்குமார், கல்லுக்காட்டுப் பட்டியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் உள்ளிட்ட மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களது இருசக்கர வாகனங்களை மணப்பாறை காவல் துறையினர் பறிமுதல்செய்தனர்.
இதையும் படிங்க: 6 நிமிடத்திற்குள் 128 பிரபலங்களின் குரலைப் பேசி கோவை இளைஞர் சாதனை!