அடுக்குமாடி குடியிருப்பு குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு மட்டுமே விற்பனை செய்யப்படும் என்ற விளம்பரத்திற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஸ்ரீரங்கம் பகுதியில் ஓம்சக்தி நிறுவனம் என்ற பெயரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இங்கு குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வீடு விற்பனை செய்யப்படும் என்று செய்தித்தாளில் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.
இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருந்தது. இந்நிலையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில், ஸ்ரீரங்கம் பகுதியில், மேலூர் ரோடு, லெட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி ரெங்கா - சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகள் விற்பனைக்கு என்ற விளம்பரம் ஒரு செய்தித்தாளில் வந்துள்ளது. இதில் சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகள் 'பிராமின்ஸ்'க்கு மட்டும்தான் விற்பனை என குறிப்பிடப்பட்டுள்ளது. பிராமின்ஸ் தவிர மற்ற அனைத்து சாதி, மதம் சார்ந்த குடும்பங்களுக்கு வீடுகள் இல்லை என்பது - குறிப்பிட்ட தலித், சிறுப்பான்மை மக்களுக்கு வீடுகள் இல்லை என்பதே விளம்பரத்தின் நோக்கமாக கருதப்படுகிறது.
இந்தச் செயல் தீண்டாமையின் நவீன வடிவமாகும். எனவே சொகுசுக் குடியிருப்பு வீடுகளின் கட்டுமான நிறுவனமான ஓம் சக்தி கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட விளம்பரத்திற்கு மன்னிப்புக் கேட்டு உடனடியாக விளம்பரம் கொடுக்க வேண்டும் இல்லையெனில், அடுக்குமாடிக் குடியிருப்பை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி அறிவித்துள்ளது.
இதையும் படிங்க:
பஞ்சாப் நேஷனல் வங்கி, லலிதா ஜுவல்லரி கொள்ளைக்கு பயன்படுத்திய சுற்றுலா வேன் பறிமுதல்