திருச்சி: பாஜக தலைவராக நியமனம் செய்யப்பட்ட அண்ணாமலை கரூரில் இருந்து சென்னை செல்லும் வழியில் முதன்முறையாக திருச்சி வந்தார்.
இதனையடுத்து திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் சிந்தாமணி அண்ணா சிலை அருகே அண்ணாமலைக்கு பாஜக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது பாஜகவினர் பட்டாசு வெடிக்க காவல் துறையினர் அனுமதி மறுத்ததால் காவல் துறையினருக்கும் பாஜகவினருக்குமிடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இருப்பினும் பாஜகவினர் பட்டாசு வெடித்தனர்.
மேகதாது விவகாரத்தில் தமிழ்நாடு அரசுக்கு துணை நிற்போம்:
இதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை கூறுகையில், "மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டிற்கு தமிழ்நாடு பாஜக எப்போதும் உறுதுணையாக இருக்கும்.
கொங்கு நாடு:
முன்னாள் தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன் கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர் என்பதால் கொங்கு நாடு எனக் குறிப்பிட்டார். ஆனால், ஊடகங்கள் அதனைப் பெரிதுபடுத்துகின்றன.
பொது சிவில் சட்டம்:
பொது சிவில் சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டம் அல்ல. இஸ்லாமியர்களை பிரித்தாளும் சூழ்ச்சி செய்து அரசியல் செய்பவர்கள்தான் பொது சிவில் சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்ற கருத்தைப் பரப்புகின்றனர்.
தடுப்பூசியை எடுத்துக்கொள்ளும் திமுகவினர்:
தமிழ்நாட்டுக்குத் தேவையான அளவிற்கு அதிகமாகவே தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.
70 விழுக்காடு தடுப்பூசியை திமுகவினரே பெற்று கட்சியினருக்கு செலுத்துகின்றனர்.
இதன் காரணமாக 30 விழுக்காடு தடுப்பூசி மட்டுமே பொதுமக்களை சென்றடைகிறது. ஆயினும் திமுகவினர் இதனை மறைத்து பற்றாக்குறை என குறை கூறுகின்றனர்" என்றார்.
இதையும் படிங்க: மேகதாது விவகாரம்: பிரதமரை சந்தித்கும் கர்நாடக முதலமைச்சர்