திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அடுத்த தாயனூர் கிராமத்தைச் சேர்ந்தவர், அக்கம்மாள் (65). இன்று வழக்கம்போல் தோட்டத்தின் அருகே மாடு மேய்த்துக்கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் அக்கம்மாளின் கழுத்தில் துணியைப்போட்டு இறுக்கிக்கொன்று விட்டு, கழுத்தில் அணிந்திருந்த 4 சவரன் செயின், ஒரு ஜோடி தோடு, இரண்டு மூக்கில் இருந்த மூக்குத்தி உள்ளிட்டவற்றை பறித்துச் சென்றுள்ளனர்.
இது குறித்து தகவலறிந்த சோமரசம்பேட்டை காவல் நிலைய போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் திருச்சி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சுஜித் டிஎஸ்பி பரவாசுதேவன் ஆகியோர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு தீவிர விசாரணை நடத்தினர்.
பின்னர் அக்கம்மாள் உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. செயின், தோடு, மூக்குத்தி உள்ளிட்ட நகைகளுக்காக மூதாட்டி கொடூரமாக கழுத்தை நெரித்துக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சிறுமிக்கு பாலியல் தொல்லை; ராஜஸ்தான் இளைஞர் கைது