கரோனா வைரஸ் (தீநுண்மி) பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டிருந்தன. தெய்வங்களுக்கு அன்றாடம் நடைபெறும் பூஜைகள் மட்டுமே தொடர்ந்து நடைபெற்றுவந்தன. பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில் ஊரடங்கு தளர்வு இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த வகையில் வழிபாட்டுத் தலங்கள் இன்றுமுதல் திறக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
இதைத் தொடர்ந்து இன்று அதிகாலை முதல் திருச்சியிலுள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், வயலூர் முருகன் கோயில், திருவானைக்காவல், மலைக்கோட்டை உள்ளிட்ட அனைத்து இந்து வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்பட்டன.
அதேபோல் மேலப்புதூர் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களும், மசூதிகளும், தர்காக்களும் இன்று காலைமுதல் திறக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் முகமூடி அணிந்து வந்தால் மட்டுமே கோயில்களுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
அதேபோல் தகுந்த இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டு தரிசனம் செய்யப்பட்டுவருகிறது. கோயில் நிர்வாகம் சார்பில் கிருமிநாசினி பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. கோயிலின் நுழைவு வாயிலில் பக்தர்களுக்கு வெப்பத் திரையிடல் பரிசோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்படுகின்றனர்.
உடலில் வெப்பம் அதிகமாக இருக்கும் பக்தர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர். எனினும் வழிபாட்டுத் தலங்களில் அதிக அளவில் கூட்டம் சேரக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆகையால் பக்தர்கள் வரையறுக்கப்பட்டு கோயில்களுக்குள் அனுமதிக்கப்பட்டுவருகின்றனர். கோயில் பணியாளர்களும், அர்ச்சகர்களும் முகமூடி அணிந்துகொண்டு பணியாற்றுகின்றனர்.