திருச்சி: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரை மணப்பாறையில் அடுத்த கோவில்பட்டி சாலையில் தொடங்கி காமராசர் சிலை, புதுத்தெரு வழியாக சென்று ரவுண்டானா பகுதியில் நிறைவுற்றது.
பாதயாத்திரையின் போது பலகார கடை ஒன்றில் அண்ணாமலை மணப்பாறை முறுக்கு சுட்டு அனைவரிடமும் பகிர்ந்தார். பின் பாஜக பெண் நிர்வாகிகள் முளைப்பாரி எடுத்து வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து யாத்திரையின் போது பேசிய அண்ணாமலை, "தமிழகத்தில் 96வது தொகுதியாக மணப்பாறைக்கு வந்து இருக்கிறோம். தனிப்பட்ட முறையில், வீரப்பூர் பொன்னர் சங்கர் அண்ணன்மார் வாழ்ந்த இடங்களான என்னுடைய மூதாதையர்கள் நாங்கள் வந்துள்ளோம்.
கடந்த 30 மாத காலமாக தமிழகத்தில் உள்ள திமுக ஆட்சியை அகற்ற வேண்டும், தமிழகத்தில் ஒரு அரசியல் மாற்றம் வேண்டும், சுத்தமான அரசியல் திரும்ப கொண்டு வர வேண்டும், சாமானியரால் அந்த அரசியல் நடத்தப்பட வேண்டும் என்ற மலை போல் உள்ள உங்களுடைய எதிர்பார்ப்பு நிறைவேறும்.
மணப்பாறை என்றால் முறுக்கு. மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த தொழில் செய்து வருகின்றனர். அதனால்தான் உங்களை கௌரவப்படுத்த வேண்டும் நோக்கத்தில் நாங்களும் சென்று முறுக்கு பிழிந்து சாப்பிட்டு வந்துள்ளோம். கடந்த 2023 மார்ச் மாதம் பிரதமர் நரேந்திர மோடி மணப்பாறை மக்களை பெருமைபடுத்தும் வகையில் மணப்பாறை முறுக்குக்கு புவிசார் குறியீடு வழங்கியுள்ளார்.
தமிழக வரைபடத்தில் மணப்பாறை உள்ளது, ஆனால் வளர்ச்சி பாதையில் மணப்பாறை இல்லை. மணப்பாறை கிருஷ்ணராயபுரம், குளித்தலை, விராலிமலை இதையெல்லாம் ஆட்சியாளர்கள் மறந்து விட்டார்கள். மணப்பாறை முறுக்கு எந்த அளவுக்கு பிரபலமோ அதேபோல மாட்டுச் சந்தையும் பிரபலம்.
1928ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மாட்டுச் சந்தையில் வாரத்திற்கு 1,500 மாடுகளுக்கு மேல் விற்பனையாகிறது. சுமார் 3 கோடி ரூபாய் அளவில் வர்த்தகம் நடைபெறுகிறது. மணப்பாறை மாட்டு சந்தையில் ஜல்லிக்கட்டு காளைகளும் விற்கப்படுகின்றன. 2011ஆம் ஆண்டு காங்கிரசும், திமுகவும் கூட்டணி ஆட்சியில் இருந்த போது ஜல்லிக்கட்டு காட்டுமிராண்டி என தடை செய்தவர்கள்.
தற்பொழுது இந்தியா முழுவதும் ஜல்லிக்கட்டு அமோகமாக நடைபெற காரணமானவர் பிரதமர் மோடி. சமீபத்தில் ஜல்லிக்கட்டு மீது போடப்பட்ட பல வழக்குகள் உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு, ஜல்லிக்கட்டுக்கு எந்த தடையும் இனி வராது என்று உருவாக்கியவர் பிரதமர். மணப்பாறை அடுத்த பொன்னணியாறு அணைக்கு 60 ஆண்டு காலமாக தண்ணீர் வேண்டும் என்று கோரிக்கை உள்ளது.
அதைப்பற்றி இதுவரை யாரும் வாய் திறக்கவே இல்லை, கண்ணூத்து அணைக்கும் தண்ணீர் வரவேண்டும் என்று யாரும் இதுவரை பேசவில்லை. இவர்கள் வாய் திறந்து தீவிரவாதிகளை மட்டுமே வெளியில் விட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். 1947ஆம் ஆண்டில் இருந்து வறுமையை ஒழிப்போம், வறுமையை ஒழிப்போம் என ஆட்சி நடத்தி இந்தியாவில் வறுமை கோட்டிற்கு கீழே அதிகமான மக்களை உருவாக்கியது தான் காங்கிரசின் சாதனை.
மோடியை சர்வாதிகாரி என்று தமிழகத்தினுடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்கிறார். காங்கிரஸ் 91 முறை, மாநிலத்தில் ஆட்சியில் இருந்த கட்சிகளை 356 சட்டப் பிரிவை பயன்படுத்தி மட்டுமே கலைத்து இருக்கிறது. 52 முறை இந்திரா காந்தி மட்டுமே மாநில ஆட்சிகளை கலைத்து உள்ளார்.
ஆனால் கடந்த 9 ஆண்டு கால பாஜக ஆட்சியில் ஒரு மாநிலத்தில் கூட ஆட்சி கலைப்பு கிடையாது, சர்வாதிகாரியாக இருந்தது காங்கிரஸ். தமிழகத்தில் காவல் துறையை வைத்து சர்வாதிகாரமான ஆட்சியை திமுக நடத்துகிறது. இன்று காவல் துறையின் முக்கியமான வேலை பாஜக கொடி கம்பம் நடுபவனை பிடி என்பது தான்.
யாத்திரை தொடங்கியபோது இருந்தவர்கள் இப்போது இல்லை, எல்லாரும் கைது செய்யப்பட்டுள்ளனர், என்னை மட்டும் கைது செய்ய பயம். புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு 1972-74ல் என்ன நடந்ததோ அதுதான் இப்போது பாஜகவிற்கு நடக்கிறது. மக்கள் பணத்தை யார் கொள்ளையடித்தாலும் நாம் கேள்வி கேட்க வேண்டும்" என்று அண்ணாமலை பேசினார்.
இதையும் படிங்க: தாய்லாந்திலிருந்து விமானத்தில் சென்னைக்கு அரிய வகை விலங்குகள் கடத்திய ஒருவர் கைது!