திருச்சி: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இருந்து சிவகங்கை மாவட்டத்திற்கு ஜன.22ஆம் தேதி டாஸ்மாக் மது பாட்டில்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சிவகங்கை நோக்கி சென்று கொண்டிருந்தது.
அப்போது லாரியை திருச்சி சமயபுரம் சுங்கச்சாவடியில் நிறுத்திவிட்டு டிரைவர் டீ குடிக்க சென்றபோது லாரியின் தார்ப்பாய் கிழித்து, அதில் 36 பெட்டி அடங்கிய மதுபாட்டில்கள் திருடப்பட்டிருந்தன. இது குறித்து லாரி டிரைவர் மதுராந்தகத்தைச் சேர்ந்த செல்வம் (36) சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். காவல் உயர் அலுவலர்களின் மேற்பார்வையில் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை துணை சூப்பிரண்டு தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
காவல் துறை விசாரணை
இந்தத் தனிப்படை காவல்துறையினர், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தியதில் மதுபாட்டில்கள் திருட்டில் ஈடுபட்ட கும்மிடிப்பூண்டி கோடீஸ்வரன் (48), கீரனூர் பழனிச்சாமி (40), அரக்கோணம் தங்கபாண்டியன் (24), மாதவரம் கிரி (40) உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.
மேலும் திருடிய மதுபாட்டில்களை விற்பனை செய்ததில் ரூ.1.40 லட்சம் ரொக்கம் மற்றும் மீதமிருந்த 103 மது பாட்டில்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். குற்றவாளிகளை விரைந்து நடவடிக்கை எடுத்த தனிப்படை காவல்துறையினரை திருச்சி மண்டல காவல்துறைத் தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் காவல் உயர் அலுவலர்கள் பாராட்டினர்.
இதையும் படிங்க:நீங்கா நினைவுகளுடன் விடைபெற்றார் இசைக்குயில் லதா மங்கேஷ்கர்!