திருச்சி: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் காக்கா முட்டை, ரம்மி, கனா, வடசென்னை உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் பிரபலம் அடைந்தவர். தற்போது, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான தி கிரேட் இந்தியன் கிச்சன், சொப்பன சுந்தரி, டிரைவர் ஜமுனா, ஃபர்ஹானா உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர் மத்தியில் கலவையான விமரிசனங்களைப் பெற்றன.
இந்நிலையில், திருச்சி மாநகரம் கரூர் புறவழிச் சாலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பிரபல தனியார் நகைக்கடை திறப்பு விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பங்கேற்றார். திறப்பு விழாவின் போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும் போது, "தங்கம் விலை தொடர்ந்து உயர்கிறது மக்கள் தங்கம் வாங்குவது கடினமான ஒன்றாக உள்ளது குறித்து உங்கள் கருத்து எனச் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, தனது குடும்பத்தில் மாதாந்திர நகைச் சீட்டுகள் போட்டுத் தான் நகைகளை வாங்கியதாகவும், அந்த வழக்கத்தை நானும் தொடர்ந்து செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "பெண்களுக்கு நகை என்றாலே மிகவும் பிடிக்கும். எனக்கும் நகைகள் என்றால் ரொம்ப பிடிக்கும். நான் திரைப்பட நடிகையாக இருந்தாலும், சிறுக சிறுக பணம் சேமித்து வைத்து நகைகளை வாங்கும் பழக்கத்தைக் கைவிடவில்லை. ஒரே நேரத்தில் மொத்தமாக ஒரு பெரிய தொகையைச் செலுத்தி பணம் நகை வாங்குவது கடினமானதாக இருக்கும். எனவே, சீட்டுகள் மூலம் சிறுக சிறுக சேமித்துத் தங்க நகை வாங்குவது என்பது எளிமையானதாக இருக்கும்" என்று கூறினார்.
இதையும் படிங்க: ஏறுமுகத்தில் உள்ள தங்கம் விலை...! 4 நாட்களில் இவ்வளவு உயர்வா?
பின் அடுத்த படங்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு, தான் அடுத்தடுத்து பல திரைப்படங்கள் நடித்து வருவதாகவும், அடுத்ததாக டியர் என்ற படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமாருடன் இணைந்து நடித்து உள்ளதாகவும் அந்த படம் அடுத்த வெளிவர உள்ளதாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்தார்.
மேலும் 'நடிப்பு அரக்கி' என்ற பட்டத்தை தங்களுக்கு வழங்கலாமா என்று ஐஸ்வர்யா ராஜேஷிடம் செய்தியாளர் கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த ஐஸ்வர்யா ராஜேஷ், எனக்குப் பட்டமெல்லாம் தேவையில்லை, நன்றாக நடிக்கிறேன் என்ற பாராட்டு பெற்றாலே போது மேலும் மக்கள் என்னைப் பாராட்டுவதே எனக்குக் கிடைக்கும் உண்மையான பட்டம் என்றும் மேலும், அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தீபாவளி விற்பனையில் களைகட்டும் பாரம்பரிய இனிப்பு பலகாரங்கள்… உள்நாடு டூ வெளிநாடு ஏற்றுமதி என உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி!