அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்க்கை முகாம் திருச்சி மாவட்டம் நவல்பட்டு அருகே போலீஸ் காலனியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், அதிமுக புறநகர் மாவட்ட செயலாளருமான ப. குமார் கலந்துகொண்டு புதிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கி வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் குமார் பேசுகையில், "பொதுநல நோக்கத்துடன் எம்ஜிஆர் அதிமுகவைத் தொடங்கினார். அவரைத் தொடர்ந்து மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவும் மக்களுக்குப் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியுள்ளார். 15 லட்சம் உறுப்பினர்களுடன் அதிமுகவை எம்ஜிஆர் விட்டுச் சென்றார்.
ஆனால் ஜெயலலிதா மறைந்தபோது ஒன்றரைக் கோடி தொண்டர்கள், 37 லட்சம் இளைஞர்கள், 37 நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேலும் இந்திய அளவில் மூன்றாவது பெரிய இயக்கமாக அதிமுகவை விட்டுசென்றார்.
தற்போது இந்த இயக்கத்தை எடப்பாடி பழனிசாமியும், ஓ. பன்னீர்செல்வமும் வழி நடத்திவருகின்றனர். கடந்த நான்கு ஆண்டுகளாகப் பல்வேறு சவால்களைச் சமாளித்து அரசையும், அதிமுகவையும் இருவரும் இணைந்து வழி நடத்திவருகின்றனர்.
திமுக ஆட்சியில் மின்சாரத் தட்டுப்பாடு இருந்தது. சொத்து அபகரிப்பு நடைபெற்றது. தற்போதும் பிரியாணி, புரோட்டா கடைகளைத் திமுகவினர் அடித்து நொறுக்கி சாப்பிடுகின்றனர். பியூட்டி பார்லருக்குச் சென்று பெண்களைத் தாக்கினர்.
13 ஆண்டு காலமாக மத்தியில் கூட்டணியில் இடம்பெற்ற திமுக காவிரிப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தவில்லை. ஜெயலலிதாதான் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடச் செய்தார்.
எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஜூன் 12ஆம் தேதி காவிரியில் சரியான நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த ஆட்சி யாருக்கும் அடிமையான ஆட்சி கிடையாது. மக்களுக்கு அடிமையான ஆட்சிதான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
திருச்சி மாவட்டம் போலீஸ் காலனி அருகே உள்ள தகவல் தொழில்நுட்ப பூங்காவில் புதிதாக 42 கோடி ரூபாய்க்கு கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதேபோல் இவ்வழியாக புதுக்கோட்டை- தஞ்சை சாலையை இணைக்கும் பணி டிசம்பர் மாதத்தில் முடிவடைய உள்ளது. திருச்சி மாவட்டத்தின் பிரதான கோரிக்கையான ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கும்பக்குடி- துவாக்குடி புறவழிச்சாலையில் நவல்பட்டு பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான கோரிக்கை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பரிசீலனையில் உள்ளது" என்றார்.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு குமார் சால்வை அணிவித்து வரவேற்றார்.
இதில் அதிமுக திருவெறும்பூர் ஒன்றியச் செயலாளர்கள் கும்பக்குடி கோவிந்தராஜ், ராவணன், துவாக்குடி நகரச் செயலாளர் எஸ்.பி. பாண்டியன், நவல்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவர் பால மூர்த்தி, புறநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கார்த்திக், கணபதி, நாகூர்கனி, காமு, சுரேந்திரன், திருநாவுக்கரசு, திலீப், செல்வராஜ், மனோ, ராதாகிருஷ்ணன், பீர்முகம்மது, மலைச்சாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக துவாக்குடியில் அதிமுக துவாக்குடி நகர அலுவலகம், ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தையும் புறநகர் மாவட்டச் செயலாளர் குமார் தொடங்கிவைத்தார்.