திருச்சி: திமுக திருச்சி வடக்கு மாவட்ட செயலாளராக இருப்பவர் காடுவெட்டி தியாகராஜன். இவர் ஒரு குறிப்பிட்ட சமுதாய பெண்கள் மற்றும் காவல் துறை அலுவலர்களை இழிவாகப் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதுதொடர்பாக உப்பிலியாபுரம் காவல் துறையினர் காடுவெட்டி தியாகராஜன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் காடுவெட்டி தியாகராஜனின் இந்தப் பேச்சைக் கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதனையொட்டி, இன்று அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரஞ்சோதி ஆலோசனையின் பேரில் திருச்சி புறநகரில் 11 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் அந்தநல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
பெண்கள் மற்றும் காவல் துறையினரை இழிவாக பேசிய காடுவெட்டி தியாகராஜன் மீது நடவடிக்கை எடுக்காத திமுக தலைவர் ஸ்டாலினை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கோஷங்களும் எழுப்பப்பட்டன.
ஸ்ரீரங்கம், முசிறி, துறையூர், மண்ணச்சநல்லூர் உட்பட 11 இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான அதிமுகவினர் கலந்துகொண்டு திமுக திருச்சி வடக்கு மாவட்ட செயலாளருக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: குறிப்பிட்ட ஒரு சமுதாயப் பெண்களைத் தரக்குறைவாக பேசிய ஆடியோ விவகாரம்: திமுக மா.செ. மீது வழக்குப்பதிவு