திருச்சி: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கர் ஜான் தாமஸ் குமார் (32), இரண்டு வயதில் திருச்சியில் உள்ள ஒரு சமூக நல அமைப்பின் மூலம் தத்துக்கொடுக்கப்பட்டு உள்ளார். தற்போது தனது தாயுடன் மீண்டும் இணைவதற்காக தமிழ்நாடு வந்து, தாயை தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளார்.
அவரது தத்தெடுப்பு ஆவணங்களில், தாயின் பெயர் 'மேரி' என்றும் தந்தையின் பெயர் சூசை என்றும் மட்டுமே உள்ளது. இதைத் தவிர அவரது குடும்பம் குறித்து வேறு எதுவும் பதிவிடப்படவில்லை. ஆகையால் தனது பூர்விகம் எது வென்று தெரியாமலும், தனது குடும்பம் தற்போது எங்கு இருக்கிறது என அறியாமலும் தவித்து வருகிறார் ஜான்.
‘எனது குடும்பம் எங்கே’: ஜான், தனது குடும்பத்தை தேடுவதற்காக, சிகாகோவில், காலநிலை மாற்றக் கொள்கை நிபுணராக இருந்த தனது வேலையை விட்டுவிட்டு, கடல் கடந்து இந்தியா வந்து தனது தேடலை தொடங்கியுள்ளார். இப்போது திருச்சியில் தனது தேடிம் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து நமது செய்தியாளரிடம் பேசிய அவர், “நான் உயிருடன் இருக்கிறேன், நலமாக இருக்கிறேன். இதனை என் தாயிடம் உரக்க கூறவேண்டும். மேலும் எனது தாய் நலமாக இருக்கிறாரா என்பதை அறிய விரும்புகிறேன். என்னுடன் பிறந்தவர்கள் யாரேனும் இருக்கிறார்களா?. அவர்கள் எப்படி இருக்கிறார்கள். அவர்களுக்கு ஏதேனும் தேவைகள் இருக்கிறதா? என அறிய ஆவல்.
என் குடும்பம் பற்றி நான் முழுமையாக அறிந்துக்கொண்டால் மட்டுமே, நான் எனது பிறவிப் பயனை அடைவேன். எனது தத்தெடுப்பு ஆவணங்களில், எனது பெயர் சம்பத் குமார் என உள்ளது. எனது பூர்விகம் எதுவாக இருக்கும்” கண்களில் நீர் ததும்ப தன் மனதில் உள்ள கேள்விகளை வெளிப்படுத்தினார். மேலும் இதற்கான விடையை தேடி வருகிறார்.
பூர்விகத்தை தேடி அலையும் இளைஞர்: ஜான் தனது இரண்டு வயதிலிருந்து, அமெரிக்கக் குடும்பத்துடன், ஓஹியோவில் உள்ள யெல்லோ ஸ்பிரிங்ஸில் வசித்து வந்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “நான் ஓஹியோவில் உள்ள கிராமப்புறங்களில் ஒரு காகசியன் குடும்பத்தில் வளர்ந்தேன். 19 வயது வரை எனக்கு தெரிந்த ஒரே இந்தியன் நான் தான். அதனால் எனக்கு இந்திய கலாச்சாரம் மற்றும் மொழி பற்றி எதுவும் தெரியவில்லை.
சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்த, அமெரிக்க தந்தை, கடந்த 2005ஆம் ஆண்டு, அமியோட்ரோபிக் பக்கவாட்டு ஸ்கெலரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அப்போது, எனது அமெரிக்க தாயார், விஞ்ஞானி மற்றும் கல்வியாளராக பணியாற்றினார். எனது தந்தை எனக்கும் என் சகோதரிக்கும் 2004இல் இந்தியாவுக்குச் செல்வதற்கான டிக்கெட்டுகளை வாழங்கினார்.
நான் எனது நாட்டைப் பார்ப்பதும், என் உறவினர்களைத் தேடுவதும் முக்கியம் என எனக்கு உணர்த்துவதற்காக அவர் அவ்வாறு செய்தார். அவர் விரைவில் இறந்துவிடுவார் என அவருக்கு தெரிந்த பின்னர், நான் எனது பூர்விகத்தை அடைய வேண்டும் என அவர் எண்ணினார். ஆனால் நான் அதை செய்ய வில்லை” என வருத்தத்துடன் தெரிவித்தார்.
திருச்சியில் முகாம்: அவர் தனது தேடலை 2018இல் தொடங்கினார், ஆனால் கோவிட்-19 தொற்றுநோயால் தாமதமானது. இப்போது, மூன்றாவது முறையாக தனது தாயைத் தேடுவதற்காக அவர் இந்தியா வந்துள்ளார். ஆனால் தனது உண்மையான தாயை அடைவது அவ்வளவு எளிதல்ல என அவர் புரிந்துக்கொண்டார்.
டெல்லியில் இருந்து இவர் தத்துக்கொடுக்கப்பட்டிருக்கலாம் என எண்ணிய இவர், கடந்த வாரம் டெல்லிக்கு சென்றுள்ளார். எனினும், அவரது முயற்சி தோல்வியுற்றது. பின்னர் கிடைத்த சில ஆதாரங்களை வைத்து தனது பூர்விகம் திருச்சி மற்றும் புதுக்கோட்டையாக இருக்கும் என எண்ணி, தற்போது தனது தேடலை திருச்சியில் தொடங்கியுள்ளார்.
இவரது தேடல் பணியில் இவருடன் இணைந்து, புனேவைச் சேர்ந்த குழந்தை கடத்தலுக்கு எதிரான அமைப்பின் (ACT) வழக்கறிஞர் அஞ்சலி பவார் தேடி வருகிறார். இது வரை இந்தியாவில் இருந்து தத்துக்கொடுக்கப்பட்ட 72 பேரை, தங்கள் உண்மையான பெற்றோருடன் இவர் இணைத்திருக்கிறார்.
உதவி எண்: இது குறித்து பேசிய அஞ்சலி, “இந்தியாவில் பெரும்பாலான தத்தெடுப்புகள் சட்டப்பூர்வமானதாகக் கருதப்பட்டாலும், அந்தக் குழந்தை எப்படி முதலில் நிறுவனத்தில் சேர்ந்தது என்பது எங்களுக்குத் தெரியாது. ஜான் விஷயத்தில், நாங்கள் அவருடைய தாயைத் தேடிக்கொண்டிருக்கிறோம். டிஎன்ஏ உதவியுடன் இவரது குடும்பத்தை தேடி வருகிறோம். வரும் வாரங்களில் கூடுதல் தடயங்கள் கிடைக்கும் என நம்புகிறோம்'' என்றார்.
இவர் குடும்பம் குறித்த தகவலை, ஈடிவி பாரத் வாசகர்கள் ஏதேனும் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றால், எப்படி தொடர்புகொள்ள வேண்டும் என நமது செய்தியாளர் கேட்டதற்கு, தன்னுடைய எண்ணை கொடுத்த அஞ்சலி, தான் அவருடன் இந்தப்பணி முடியும்வரை இருப்பேன் என்றார். இவருடைய தாயாரைப்பற்றிய விபரங்கள் தெரிந்தவர்கள் இந்த எண்ணில் (98222 06485) தொடர்பு கொள்ளலாம்.
இதையும் படிங்க: ராஜஸ்தான் டூ டெல்லி: ராணுவ வேட்கையால் 350 கி.மீட்டர் ஓடிய இளைஞர்