திருச்சி: நடிகர் விஜய், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். அவரின் ஒவ்வொரு அசைவையும் விழா போல் கொண்டாடி வரும் நிலையில் ரசிகர்கள், படங்கள் வெளியாகும் தருணங்களில், பல்வேறு நலப்பணித் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர் சினிமாவில் நடிப்பதை தவிர அரசியலிலும் தீவிரமாக இறங்கி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் நீண்ட நாள் கனவாக இருந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தனது ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றி பல்வேறு மக்கள் நலப் பணிகளை ரசிகர்கள் மூலம் நடிகர் விஜய் செய்து வருகிறார்.
அரசியலில் இறங்குவதற்கான முதல் படியாக, சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 133 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவின் பேரில் தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள அவருடைய ரசிகர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
மேலும் ஏற்கனவே நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு புதுக்கோட்டை, ராணிப்பேட்டை உள்ளிட்ட நகராட்சிகளில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கவுன்சிலர் பதவிகளை கைப்பற்றி உள்ளனர்.
அதே போன்று எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டசபை தேர்தலிலும் தனித்தோ, கூட்டணி வைத்தோ வெற்றி பெற்று அரசியலில் காலூன்ற வேண்டும் என்பதற்காக முக்கிய நகரங்களில் மாநாடு நடத்த திட்டம் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் நடிகர் விஜய்யின் பிறந்த நாள் அடுத்த மாதம் ஜூன் 22 ஆம் தேதி வருகிறது. இதை அவரது ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாட திட்டமிட்டு உள்ளனர்.
இதனை ஒட்டி, அரசியலில் திருப்புமுனைகளுக்கு பெயர் பெற்ற திருச்சியில் அடுத்த மாதம் மாநாடு நடத்த அவரது ரசிகர்கள் திட்டமிட்டு உள்ளனர். அதனை உறுதிப்படுத்தும் வகையில் திருச்சி மாவட்ட விஜய் ரசிகர் மன்றங்கள் சார்பாக திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியம் பகுதியில் சுவர் விளம்பரங்களை எழுதியுள்ளனர். அதில் "திருச்சி என்றாலே திருப்பம் தான்... விரைவில் மாநாடு.. காத்திருக்கு தமிழ்நாடு.. வா தலைவா.." தளபதியாரே! என விஜய் ரசிகர்கள் அழைப்பு விடுக்கும் விதமாக சுவர் விளம்பரங்கள் இடம் பெற்றுள்ளன.
விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவராக இருந்த ஆர்.கே ராஜா, முன்னாள் நிர்வாகிகளான மும்பை பவுல் பாரதிராஜா, ஹரிஹரன் உள்ளிட்ட பெயரில் இந்த சுவர் விளம்பரங்கள் வரையப்பட்டுள்ளன.
இவர்கள் விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட நிலையில் விஜய் ரசிகர்கள் என்ற பெயரில் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதுதொடர்பாக, விஜய் மக்கள் இயக்க தலைமையில் இருந்து எந்த வித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காதல் படங்களில் அதிகம் நடித்ததில்லை: ஐஸ்வர்யா ராஜேஷ் ஓப்பன் டாக்!