தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் ஜூன் 23ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், ஐசரி கணேசன் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதுகின்றன.
இந்நிலையில், பாண்டவர் அணி சார்பில் திருச்சி நாடக நடிகர்கள் சங்கத்தினர் மத்தியில் ஆதரவு திரட்டினர். இதில் பாண்டவர் அணி சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நாசர், துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் பூச்சி முருகன், கருணாஸ், இயக்குநர் மனோபாலா, நடிகை ரோகினி உள்ளிட்டோர் பரப்புரை மேற்கொண்டனர்.
பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் கூறியதாவது, நாடக நடிகர்களை சந்தித்தது மகிழ்ச்சி. நல்லதொரு ஆரம்பமாக இருக்கிறது. இது தொடர்ந்து செல்லும். நாடக கலைஞர்களை மாவட்ட வாரியாக பார்க்காமல் ஒட்டுமொத்தமாக பார்த்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். அனைத்து வயதினருக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
நடிகர் சங்கத்தில் அரசியல் குறுக்கீடு எதுவும் இல்லை.
எம்ஜிஆர் கல்லூரியில் தேர்தலை நடத்தவிடாமல் தடுக்க சதி நடக்கிறது. பாதுகாப்புக் குறைபாடு என்று காவல் துறை தரப்பில் அனுமதி மறுக்கப்படுகிறது. ஆனால் அங்கு தினமும் 4,500 மாணவர்கள் வந்து செல்கின்றனர். 7,000 பேர் கலந்து கொண்ட பல கூட்டங்கள், நிகழ்ச்சிகள் நடந்துள்ளது. நடிகர் சங்க தேர்தலுக்கு ஆயிரத்து 500 பேர் மட்டுமே வருவார்கள்.
இது போன்றவற்றை நாங்கள் காவல் அலுவலரிடம் எடுத்துக் கூறியுள்ளோம். நல்ல முடிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
தேர்தலை தடுக்க யார் சதி செய்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். கடந்த முறை ஜெயலலிதா தேர்தல் நல்ல முறையில் நடத்த சிறப்பான பாதுகாப்பு அளித்து நேர்மையாக தேர்தல் நடக்க உறுதுணையாக இருந்தார்.
இந்தத் தேர்தல் சிறப்பாக நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. மூத்த நடிகர்களான ரஜினி, கமல் ஆகியோர் இந்த சங்கம் சிறப்பாக நடத்தப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.
நடிகர் சங்கத்தில் இருந்து யாரும் சட்டவிரோதமாக நீக்கப்படவில்லை. தேர்தலில் போட்டியிடும் இரு அணிகளில் பகுதி பகுதியாக வெற்றிபெற்றாலும் திட்டமிட்டபடி நடிகர் சங்க கட்டடம் கட்டி முடிக்கப்படும் என்றனர்.