திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஆட்சியர் சிவராசு தலைமை வகித்தார். அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன், மாவட்ட அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "திருச்சி மாவட்டத்தில் 7,871 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 67 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 59 பேர் பூரண குணமடைந்து வீட்டிற்கு திரும்பிவிட்டனர். தற்போது 8 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் இரண்டு பேர் மாலத்தீவைச் சேர்ந்தவர்கள். ஆறு பேர் மட்டுமே திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முதியவர்கள், நலவாரிய உறுப்பினர்கள், நாடக கலைஞர்கள், பூசாரி நலவாரிய உறுப்பினர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசின் பல்வேறு துறைகள் சார்பில் நிதி உதவி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. திருச்சியில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் தினமும் மூன்று வேளை இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 14 ஆயிரம் பேர் பயனடைந்து வருகின்றனர்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 99 பேர் 1.69 கோடி ரூபாயை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக அளித்துள்ளனர். அதேபோல் பிரதமர் நிவாரண நிதிக்கு நான்கு பேர் 1.12 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளனர். வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் சேதுராப்பட்டியில் உள்ள பொறியியல் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். எனினும் அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமையில் அனைத்து அலுவலர்களும் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். திருச்சி மாவட்டம் கரோனா இல்லாத மாவட்டமாக விரைவில் உருவாகும்" என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறினார்.
இதையும் படிங்க: குடிசைப் பகுதி மக்களுக்கு இலவச முகக் கவசம் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி