"தனித் தொகுதிகளில் அருந்ததியினருக்கு சமூகநீதி" என்ற தலைப்பில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் திருச்சியில் நேற்று கருத்தரங்கம் நடைபெற்றது.
மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த இந்த கருத்தரங்கிற்கு, திருச்சி மாவட்ட செயலாளர் அருந்ததி அரசு தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஆதித்தமிழர் பேரவை நிறுவனத் தலைவர் அதியமான் சிறப்புரையாற்றினார்.
இதன் பின்னர் அதியமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "மகாராஷ்டிராவில் பாஜக அரசு நடத்திய ஜனநாயகப் படுகொலையை ஆதித்தமிழர் பேரவை கண்டிக்கிறது. எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற ஆணவப் போக்குடன் செயல்படும் மத்திய மோடி அரசின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கது. அருந்ததியினருக்கு ஆறு விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இதற்காக திருச்சியைச் சேர்ந்த ராணி என்பவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அடுத்து வரும் ஆட்சியினர் அருந்ததியினருக்கு ஆறு விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும். டிசம்பர் 22ஆம் தேதி கோவையில் நீல நிற பேரணி நடைபெற உள்ளது. ஆதித்தமிழர் பேரவை நடத்தும் இந்தப் பேரணியில் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்வார்கள்.
இந்து அமைப்புகளின் அராஜக போக்கை கண்டித்து இந்த பேரணி நடத்தப்படுகிறது. இதற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளன. உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா? நடக்காதா? என்று ஊசலாட்டத்தில் உள்ளது. தமிழ்நாடு அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணியில் ஆதித்தமிழர் பேரவை இடம்பெற்றுள்ளது. அருந்ததியர் மக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் நாங்கள் போட்டியிட திமுகவிடம் பேசி வாய்ப்புகளை கேட்டுப் பெறுவோம்" என்றார்.