திருச்சி: மலேசியா கோலாலம்பூரிலிருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று (ஆக.28) காலை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று வந்தது.
இந்த விமானத்தில் புதுக்கோட்டை மாவட்டம், நீர் பழனி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் வேல்முருகன் (36) பயணம் செய்தார்.
விமானத்தில் அசைவின்றியிருந்த பயணி
விமானம் திருச்சி வந்த பின்னரும் வேல்முருகன் இறங்காமல் விமானத்தில் அமர்ந்தவாறு இருந்துள்ளார். இதைப்பார்த்த விமான நிலைய ஊழியர்கள் அவரிடம் சென்று பார்த்தபோது உடல் அசைவின்றி இருந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாக விமான நிலைய மருத்துவ நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலையடுத்து விரைவாக விமானத்திற்கு வந்த மருத்துவர் அவரை பரிசோதனை செய்தனர்.
உறவினர்களுக்கு தகவல்
பரிசோதனையில் வேல்முருகன் உயிரிழந்தது தெரியவந்தது. இதனையடுத்து விமான நிலைய அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பின்னர் வேல் முருகனின் உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
விமான நிலைய காவல் துறையினர் விரைந்து வந்து உடலை கைப்பற்றி, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: உள்நாட்டு விமான நிலையங்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு