திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகேயுள்ள சேத்துப்பட்டியைச் சேர்ந்தவர் பெரியதம்பி (55). கூலித் தொழிலாளியான இவர் நேற்று (பிப். 04) இரவு தேசிய நெடுஞ்சாலையை நடந்து கடக்க முயன்றுள்ளார். அப்போது, அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியதில் பெரியதம்பி கீழே விழுந்தார்.
இதையடுத்து, கீழே விழுந்த பெரியதம்பி எழுவதற்கு முயன்றபோது திருச்சி நோக்கி அதிவேகமாகச் சென்ற கார் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து, பெரியதம்பியின் உறவினர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கார் ஓட்டுநரை கைது செய்யக்கோரி உடலை எடுக்க மறுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கார் ஓட்டுநர் பாலமுருகனை கைது செய்ததையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: பெரம்பலூரில் பிரேக் இல்லாத பேருந்து மோதி விபத்து: ஒருவர் படுகாயம்!