திருச்சி: மணப்பாறை அடுத்த கருங்குளத்தில் புனித வனத்து அந்தோணியார் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. விமரிசையாக நடைபெற்ற விழாவில் திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பல்வேறு கிராமங்களில் இருந்து 300 மாடு பிடி வீரர்கள் மற்றும் 600க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன.
ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் செல்வராஜ் விழாவைத் தொடங்கி வைத்தார். வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டு காளைகளை அடக்க களம் கண்டனர். வாடிவாசலில் இருந்து சீறிப் பாய்ந்த காளைகளை அடக்க வீரர்களிடையே போட்டா போட்டி ஏற்பட்டது. போட்டியில் வென்ற வீரர்கள் மற்றும் காளைகளுக்கு சில்வர் குடம், அண்டா, குண்டா, ரொக்கப் பணம் உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியை முன்னிட்டு பாதுகாப்புப் பணியில் 300-க்கும் மேற்பட்ட காவலர்கள் கலந்து கொண்டனர். அதிக காளைகளை அடக்கி வெற்றி வாகை சூடிய வீரருக்கு மணப்பாறை வட்டாட்சியர் தனலட்சுமி பரிசு கோப்பையினை வழங்கினார். மேலும் ஜல்லிக்கட்டு போட்டியை காண அண்டை கிராமங்களில் இருந்து பலர் குவிந்ததால் கிராமமே மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
இதையும் படிங்க: உபியில் லாரி மோதி 5 பேர் உயிரிழப்பு.. விபத்தை வேடிக்கை பார்த்ததால் வீபரீதம்..