திருச்சி: முசிறி தாலுக்கா தா.பேட்டை அருகே கொழிஞ்சிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜ் (66) விவசாயி. இவருக்கு மனைவியும், இரண்டு மகள், ஒரு மகனும் உள்ளனர். அதே ஊரைச் சேர்ந்தவர் செல்லதுரை (52) ஆடுகள் மேய்த்தும்,
கூலிவேலையும் செய்து வாழ்ந்து வருகிறார்.
அவ்வப்போது மிகுந்த மன அழுத்தத்துடன் செல்லதுரை கிராமத்தில் சுற்றித் திரிவார் என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு துரைராஜ் வயலில் இருந்து வீட்டிற்கு நடந்து வந்துள்ளார். வீட்டின் அருகே வந்தபோது பின்னால் அரிவாளுடன் வந்த செல்லதுரை, விவசாயி துரைராஜை அறிவாளால் சரமாரியாக வெட்டி, கீழே சாய்த்து தலையை கையில் பிடித்து அறிவாளால் கொத்தி உள்ளார். இதில் மூளை சிதறி சம்பவ இடத்திலேயே துரைராஜ் இறந்து போனார்.
துரைராஜை வெட்டிய போது செல்லதுரையின் கைகளிலும் வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது. உயிரிழந்து ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்த துரைராஜின் அருகிலேயே அமர்ந்திருந்த செல்லதுரை சற்று நேரத்தில் அவர் அருகிலேயே படுத்துக் கொண்டுள்ளார். இதனைக் கண்ட அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்து தா.பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ், சப் இன்ஸ்பெக்டர்கள் பாலேந்திரன், ரவிச்சந்திரன், பரமேஸ்வரன் மற்றும் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்வதற்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்தில் இருந்த செல்லதுரையை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு, காயமடைந்திருந்த செல்லதுரையை சிகிச்சைக்காக போலீஸ் காவலுடன் துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தை முசிறி போலீஸ் டிஎஸ்பி யாஸ்மின் நேரில் பார்வையிட்டு விசாரித்தார். மன அழுத்தத்துடன் சுற்றித்திரிந்த நபரால் விவசாயி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: OTP இல்லாமல் மிஸ்டு கால் மூலம் ரூ.50 லட்சம் திருட்டு.. பொதுமக்கள் உஷார்!