திருச்சி அருகே வாத்தலைப் பகுதியில் சாலை ஓரத்தில் நின்றிருந்த ஆம்னி வேன்மீது அதிவேகமாக திருச்சி நோக்கி வந்த லாரி மோதி, நிலைதடுமாறி கவிழ்ந்து, விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து வாத்தலை காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர்.
தகவலின் அடிப்படையில் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், ராசிபுரம் பகுதியில் இருந்து சமயபுரம் கோயிலுக்கு சாமி கும்பிடுவதற்காக வந்த குடும்பத்தினர் வாத்தலை பகுதியில் டீ குடிப்பதற்காக சாலை ஓரத்தில் ஆம்னி வேனை நிறுத்தி வைத்துள்ளனர்.
அப்போது அவ்வழியே நாமக்கல்லில் இருந்து உப்பு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக சென்ற லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்னி வேன் மீது மோதி, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது தெரியவந்தது.
இந்த விபத்தில் ஆம்னி வேன் அப்பளம் போல் நொறுங்கியதால் ஆம்னி வேனில் இருந்த ராசாத்தி அம்மாள் என்ற பெண்ணும், 2 வயது குழந்தையும் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஒரு பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். மேலும் இந்த விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் ஒரு குழந்தை, ஒரு பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:கள்ளக்குறிச்சி பள்ளி சேதப்படுத்தியவர்களை சிசிடிவி மூலம் அடையாளம் கண்டு கைது...