திருச்சி விமான நிலையத்தில் மலேசிய தலைநகர் கோலாலம்பூர் செல்வதற்காக ஏர் ஏசிய விமானம் இன்று காலை தயாராக இருந்தது.
அதில், பயணம் செய்யவந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் மத்திய வான் நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்கள் சோதனை செய்தனர்.
அப்போது, பெரம்பலூரைச் சேர்ந்த பெரியசாமி என்பவரின் உடைமையைச் சோதனை செய்தபோது ஒரு கைப்பையில் வெளிநாட்டுப் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதில், ஆறாயிரத்து 265 யூரோ, இரண்டாயிரத்து 579 மலேசியன் ரிங்கட், 430 சிங்கப்பூர் டாலர், இரண்டாயிரம் ரியால், 27.20 கிராம் திராம் என மொத்தம் ஆறு லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டுப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து, பெரியசாமியைக் கைதுசெய்த வான் நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்கள் இது குறித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
