மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் ஒன்று திருச்சி விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அலுவலர்கள் சோதனை செய்தனர். அப்போது ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகமது அஸ்லம் என்பவர் தனது பேண்ட் டிக்கெட் பாக்கெட், ஆசன வாயிலில் 678 கிராம் எடை கொண்ட தங்க கட்டிகளை பேஸ்ட் வடிவில் மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதே போல், கைப்பையில் மறைத்து வைத்து 259 கிராம் எடை கொண்ட தங்கத்தை கடத்தி வந்த தியாகராஜன் என்பவர் சிக்கினார்.
இதைதொடர்ந்து மலேசியாவில் இருந்து வந்த ஏர் ஏசியா விமானத்தில், மலேசியாவைச் சேர்ந்த சரஸ்வதி வீரப்பன் என்பவர் 240 கிராம் எடை கொண்ட 8 வளையல்களை தனது கைகளில் மறைத்து அணிந்தது தெரியவந்தது. மொத்தம் ரூ.40 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக மூன்று பேரிடமும் அலுவலர்கள் நடத்திய விசாரணையில், கமிஷனுக்கு ஆசைப்பட்டு தங்கம் கடத்தியது தெரியவந்தது.