திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூரில் ஆண்டுதோறும் மாட்டு பொங்கலன்று ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டு தொடர் மழை காரணமாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படவில்லை. அதற்கு பதிலாக இன்று நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று காலை 9 மணியளவில் தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டியில் 550காளைகளும், 450 மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டனர். திருச்சி ஆர்டிஓ விஸ்வநாதன் தலைமையில் ஜல்லிக்கட்டு விழா நடைபெற்றது. திருச்சி (பொறுப்பு) எஸ்.பி. செந்தில்குமார் தலைமையில் 250 அதிவிரைவு படை போலீசார் உட்பட 800 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மாவட்ட கால்நடை துறை இணை இயக்குநர் எஸ்தர் ஷீலா தலைமையில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு போதைப் பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளதா, ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ள தகுதியுடன் உள்ளதா என பரிசோதனை நடைபெற்றது. இந்த விழாவில் திருவெறும்பூர் எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அதிமுக திருச்சி தெற்கு புறநகர் மாவட்ட செயலாளர் குமார், மக்கள் நீதி மய்ய மாநில செயலாளர் முருகானந்தம்|உட்பட பலர் கலந்துகொண்டனர்.
திருவெறும்பூர் வட்டார மருத்துவ அலுவலர் சுகுமார் தலைமையில் ஜல்லிக்கட்டு போட்டி மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு இருசக்கர வாகனம் முதல் பரிசாகவும், குளிர்சாதனப் பெட்டி இரண்டாவது பரிசாகவும் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டு விழாவில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு குத்து விளக்கு, தங்க காசு,ரொக்கத் தொகை உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
சீறி பாய்ந்த காளைகளை அடக்கும்போது 30க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் காயமடைந்தனர். மணிகண்டம் செங்குறிச்சி சேர்ந்த சத்யராஜ் (34), பூலங்குடியைசேர்ந்த சரத்குமார் (19), கல்லுகுடி சேர்ந்த நாகராஜ் ஆகிய 3 பேரும் முதற்கட்ட சிகிச்சைக்கு பின்னர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் சரத்குமார் மற்றும் சத்யராஜ் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இதையும் படிங்க:கோயில் சிலைகள் மாயமாகும் விவகாரம்: இந்து சமய அறநிலையத் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு