வேலூர் மாவட்டம் மேல்மொனவூரைச் சேர்ந்தவர் உதயகுமார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வேலூரில் உள்ள பிரபல மருத்துவமனையில் பணியிடம் காலியாக உள்ளதாகவும், அதில் சேர விரும்பமுள்ளோர் தன்னை தொடர்புக்கொள்ளலாம் என பொய்யான பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
சமூக வலைதள பதிவினைக் கண்ட காட்பாடி பகுதியை அடுத்த கல்புதூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், அடிப்படையில் வேலை வேண்டும் என அவரை அணுகியுள்ளார். வேலையை உறுதி செய்ய வேண்டுமென்றால் 47,000 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று அந்த ஆசாமி கூறியதை அப்பெண்ணும் நம்பி அவரிடம் பணத்தைக் கொடுத்துள்ளார்.
ஆனால், நீண்ட நாள்களாகியும் வேலையும் பெற்றுத்தராமல், பணத்தையும் கொடுக்காமல் உதயகுமார் அப்பெண்ணை ஏமாற்றி வந்துள்ளதாக அறியமுடிகிறது.
பொறுமையிழந்த அப் பெண் காட்பாடி காவல் நிலையத்தில் உதயகுமார் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் உதயகுமாரை கைது செய்த காட்பாடி காவல்துறையினர், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது போல வேலைவாங்கி தருவதாக உதயகுமார் எத்தனை நபர்களை ஏமாற்றியுள்ளார், எவ்வளவு ரூபாய் பணத்தை மோசடி செய்துள்ளார் என்பது விசாரணைக்கு பிறகே தெரியவரும் என காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.