சேலம் வீராணம் அடுத்த அல்லிக்குட்டையைச் சேர்ந்தவர் சதீஷ். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு வீராணம் காவல் நிலையத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸாக பணியாற்றி வந்துள்ளார். அப்போது அங்கு பணியாற்றிய உதவி காவல் ஆய்வாளர் சத்தியமூர்த்தி உடன் நட்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நட்பின் அடிப்படையில் எஸ்ஐ சத்தியமூர்த்தி சதீஷிடம் 6 லட்சம் ரூபாயைக் கடன் கேட்டுப் பெற்றுள்ளார். இந்நிலையில், சத்தியமூர்த்தி எதிர்பாராத வகையில் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அப்போது, சத்தியமூர்த்தியிடம், 6 லட்ச ரூபாய் கடனை சதீஷ் திருப்பிக் கேட்டுள்ளார். ஆனால், 'உன்னிடம் நான் பணம் வாங்கவில்லை ஏன் உனக்கு தர வேண்டும் என்று கூறி சதீஷை உதவி காவல் ஆய்வாளர் சத்தியமூர்த்தி அவமானப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.இருவருக்கும் தகராறு ஏற்பட்டதைத் தொடர்ந்து, சேலம் காவல் ஆணையர் அலுவலகத்தில் சதீஷ் புகார் மனு அளித்துள்ளார்.
இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், மருத்துவமனையில் இருந்து குணமடைந்த உதவி காவல் ஆய்வாளர் சத்தியமூர்த்தி தற்போது கிச்சிப்பாளையம் காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இந்தத் தகவலை அறிந்த சதீஷ், கிச்சிப்பாளையம் காவல் நிலையம் சென்று உதவி காவல் ஆய்வாளர் சத்தியமூர்த்தியிடம் கொடுத்த கடனை கேட்டுள்ளார் .
இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்படவே, மனமுடைந்து வெளியில் வந்த சதீஷ் கிச்சிபாளையம் காவல் நிலைய வளாகத்திலேயே தான் எடுத்து வந்திருந்த விஷத்தை அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார் .
இதனைக் கண்ட பிற காவல் துறையினர் சதீஷை மீட்டு அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர் . இதுதொடர்பாக கிச்சிப்பாளையம் இன்ஸ்பெக்டர் சிவகுமார் விசாரணை நடத்தி வருகிறார்.