சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து தமிழ்நாட்டிற்கு ஆண்டுதோறும் ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சியும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சியும் வழங்கப்பட வேண்டும்.
அந்த ஒப்பந்தத்தின்படி இந்த பருவத்திற்கான தண்ணீர் கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதன் காரணமாக பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
மொத்த கொள் அளவான 3,231 மில்லியன் கன அடியில் தற்போது 1,211 மில்லியன் கன அடி நீர் தற்போது இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
மேலும், மழை பொழிவின் காரணமாக கால்வாய் மூலமாக நீர் வரத்து அதிகரிக்கும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னை பெருநகர மக்களின் குடிநீர் தேவைக்காக பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரி வினாடிக்கு 165 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்ட பொதுப் பணித்துறை பாசனப் பிரிவு உதவி பொறியாளர் ரமேஷ், மெட்ரோ வாட்டர் உதவிப் பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் பணியாளர்கள் நீரை திறந்து வைத்தனர்.
கால்வாய்களில் பொது மக்கள் யாரும் குளிக்கவோ, நீச்சல் அடிக்கவோ, செல்பி எடுக்கவோ, குழந்தைகளை விளையாட வைக்கவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.