விழுப்புரம் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள போக்சோ வழக்குகளைச் சீராய்வுசெய்து அவற்றை விரைந்து முடிக்கவும், குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்குமாறு இன்று விழுப்புரம் காவல் துறை கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து ரவிக்குமார் எம்.பி. வலியுறுத்தினார்.
இதன் பின்னர் ஊடகங்களைச் சந்தித்த அவர், "2019ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் அடிப்படையில் இதற்கென எனது தலைமையில் ஒரு ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.
அதில் 278 போக்சோ வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அவற்றின் தற்போதைய நிலை என்ன? அவை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பதை குறித்தெல்லாம் தெரிவிக்குமாறு காவல் துறை கண்காணிப்பாளரிடம் நான் கோரிக்கைவிடுத்தேன்.
தற்போது காவல் கூடுதல் கண்காணிப்பாளர் (ஏ.எஸ்.பி.) தலைமையில் போக்சோ வழக்குகளைக் கண்காணித்துவருவதாகவும், நடவடிக்கை எடுப்பதற்காக குழு அமைக்கப்பட்டு இருப்பதாகவும் காவல் துறை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
இந்த வழக்குகளில் குற்றவாளிகள் தண்டனை பெறாமல் தப்பிப்பதற்கு வழக்கு கொடுப்போர் சமரசம் ஆகிவிடுவதும்கூட ஒரு காரணமாக இருக்கிறது எனக் காவல் துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததுதான் அதற்கு அடிப்படை. எனவே, அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும்விதமாக குறும்படங்களைத் தயாரித்து மக்களிடம் பரப்பவும், நேரடியாக மக்களிடையே சென்று விழிப்புணர்வுப் பரப்புரையில் ஈடுபடவும் திட்டமிட்டிருக்கிறோம் எனக் காவல் துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
விரைவில் இந்த வழக்குகள் தொடர்பான தற்போதைய நிலை குறித்த அறிக்கையை வழங்குவதாகவும் உறுதியளித்தார்" எனத் தெரிவித்தார்.