திருப்பூர் : நீட் நுழைவுத் தேர்வின்போது மத உணர்வுகளைக் காயப்படுத்தும் வகையில் தாலியை கழற்றி வைத்த சம்பவத்திற்கு தமிழ்நாடு ஏகத்துவ ஜமாஅத் தலைவர் வேலூர் இப்ராஹிம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில், பல்வேறு இடங்களில் பாஜக அரசின் நலத்திட்டங்கள் குறித்த பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் கலந்து கொள்ள திருப்பூருக்கு வருகை தந்திருந்த தமிழ்நாடு ஏகத்துவ ஜமாஅத் தலைவர் வேலூர் இப்ராஹிம் இன்று(செப்.21) பாஜக கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், " இந்திய பிரதமருக்கு எதிராக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மேற்கொண்டு வரும் பொய் பிரச்சாரங்களை, அவதூறுகளை முறியடிக்கும் வகையிலும் மத்திய அரசின் நலத் திட்டங்களை மக்களுக்கு தெரிவிக்கும் வகையிலும் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு தேர்தலை மையமாக வைத்து மத்திய அரசின் திட்டங்களை எதிர்த்து எதிர்க்கட்சிகள் நாடகமாடி வருகின்றன. தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் நிச்சயம் தேவைப்படுகிறது. அது தேசபக்தர்களால் சாத்தியமாகும். நீட் தேர்வு மாணவர்களுக்கு அவசியமான ஒன்று என மக்கள் ஏற்றுக் கொண்ட நிலையில், அதனை எதிர்த்து அரசியல் கட்சிகள் தவறான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது.
நீட் தேர்வில் மத உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் தாலியை கழற்ற வைத்த சம்பவம் கண்டனத்திற்கு உரியதாகும். இனிவரும் காலங்களில் இது போன்ற நடைமுறைகளை தேர்வு அலுவலர்கள் கையாள்வதில் கவனம் செலுத்த வேண்டும்" என தெரிவித்தார்.