சென்னை ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் ஆடியபாதம் தெருவைச் சேர்ந்தவர் மாடசாமி. இவர் கட்டட மேஸ்திரியாக பணிபுரிந்து வந்தார்.
இதற்கிடையில், மாடசாமி தனது வீட்டு மாடிக்கு படிக்கட்டு அமைக்க முடிவு செய்தார். இதனையடுத்து, அவர் இன்று (அக்.20) மேற்கண்ட வேலைக்காக திருமுல்லைவாயல், செந்தில் நகர், பாரதிதாசன் தெருவில் வசித்து வந்த ஜெய்சங்கர் (50) என்ற கட்டிட தொழிலாளியை அழைத்துள்ளார்.
பின்னர் மாடசாமி, ஜெய்சங்கர் இருவரும் படிக்கட்டு பணிக்கு பில்லர் அமைக்க குழி தோண்டும் பணியில் ஆக்கர் மூலமாக ஈடுபட்டனர்.
அப்போது, அங்குள்ள் மாடசாமியின் வாடகை வீட்டின் பூமிக்கு அடியில் சென்று கொண்டிருந்த மின்சார வயரில் ஆக்கர் சிக்கியுள்ளது.
அதிலிருந்து, மின்சாரம் இருவர் மீதும் பாய்ந்ததில் அவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதில், உடல் கருகி மாடசாமி, ஜெய்சங்கர் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருமுல்லைவாயல் ஆய்வாளர் ராமசாமி தலைமையிலான காவல் துறையினர் இருவரது உடலையும் மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.