கரூர் மாவட்டம் பஞ்சப்பட்டியை அடுத்த வெள்ளகவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் இளைஞர் கரண் (18). புலியூரில் உள்ள பேக்கரியில் பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், இன்று காலை தனது நண்பருடன் மாயனூர் கதவணைக்கு சென்றுள்ளார்.
அந்த கதவணையில் இருந்து பிரிந்து செல்லும் கட்டளை மேட்டு வாய்க்காலில் இறங்கி கரணும், அவரது நண்பர்களும் குளித்துள்ளனர்.
அப்போது, வாய்க்காலை பின்பிறமாகக் கொண்டு அவர் தமது கைப்பேசியில் செல்பி எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது, திடீரென நிலைத்தடுமாறி அவர் விழுந்த அவர் நீரில் மாயமானார்.
இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக மாயனூர் காவல் துறையினருக்கும், மீட்புப் படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் ஏறத்தாழ 1 மணி நேரத்திற்கும் மேலாக போராடி கரணின் உடலை மீட்டனர்.
உயிரிழந்த இளைஞர் கரணின் உடலை கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இளைஞர் கரணின் மரணம் தொடர்பாக மாயனூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.