கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் தமிழ்நாட்டின் சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத்தொடர் திட்டமிட்டபடி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கலைவாணர் அரங்கில் மூன்றாவது தளத்தில் நடைபெற்றுவருகிறது.
சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் மூன்றாம் நாளான இன்று கேள்வி நேரத்தில் விவாதம் நடைபெற்றது.
அப்போது சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களது தொகுதி சார்ந்த பிரச்னைகளையும், கோரிக்கைகளையும் முன்வைத்தனர். அதற்குத் துறைசார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர்.
இன்றைய நிகழ்ச்சியின்போது, பேசிய கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், "தமிழ்நாடு எல்லாத் துறைகளிலும் முதன்மை மாநிலமாகத் திகழ்ந்துகொண்டிருக்கிறது. அந்த வகையில், தமிழ்நாட்டின் வரலாற்றில் கால்நடை பராமரிப்புத் துறைக்குச் சரித்திர சாதனையாக இந்த ஆண்டு மட்டும் மூன்று கால்நடை மருத்துவக் கல்லூரிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் தலைவாசலில் உலகத்தரம் வாய்ந்த ஒருங்கிணைந்த கால்நடைப் பூங்கா ரூபாய் 1,000 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுவருகிறது. இவ்வளாகத்தில் ரூபாய் 213 கோடி மதிப்பீட்டில் ஒரு கால்நடை மருத்துவக் கல்லூரி.
துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனி மாவட்டம் வீரபாண்டியில் ரூபாய் 254 கோடி முதலீட்டில் ஒரு கால்நடை மருத்துவக் கல்லூரி.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி பண்ணைக்கிணற்றில் ரூபாய் 253 கோடி மதிப்பீட்டில் ஒரு கால்நடை மருத்துவக் கல்லூரி என 710 கோடி ரூபாய் மதிப்பில் 3 கல்லூரிகளும், துறைசார்ந்த எண்ணற்ற வகையில் பல திட்டங்களையும் வகுத்து சரித்திர சாதனைகளைத் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி படைத்துவருகிறார்.
உடுமலைப்பேட்டை தொகுதியில் ஒரு கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கிய அவருக்கு என் சார்பாகவும், எனது தொகுதி மக்கள் சார்பாகவும் கோடான கோடி நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்தார்.