திருச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு பேரவை கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்ட அக்கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ஒரே நாடு ஒரே இந்தியா என்று உருவாக்குவதற்கு பாஜக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுமட்டுமல்லாமல் புதிய கல்விக் கொள்கை திட்டம் ஒன்றையும் கொண்டு வந்துள்ளது. தற்போது 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்ற பரப்புரையையும் கையாண்டு வருகிறது.
பாஜகவின் ஒரே நாடு என்ற கொள்கை மாநிலங்களை அழிக்கும் நோக்கமாகும். மாநிலங்கள் என்பது வெறும் நிர்வாக அமைப்பு மட்டும் கிடையாது. மொழி, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். இவற்றை அழிக்கும் நோக்கத்துடன் பாஜக ஒரே நாடு கோஷத்தை எழுப்பி வருகிறது.
தற்போது நாடு முழுவதும் 'ஒரே ரேசன் கார்டு' என்ற திட்டத்தை மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் அறிவித்துள்ளார். அசாமில் இருப்பவருக்கும், தமிழ்நாட்டில் இருப்பவருக்கும் எதற்காக ஒரே ரேஷன் கார்டு. தமிழ்நாட்டில் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் பல உணவு மானியங்கள் வழங்கப்படுகிறது. ஆனால் சில மாநிலங்களில் மானியம் கிடையாது. உணவு மானியத்தை ஒழிக்கும் நோக்கத்தோடுதான் மத்திய அரசு இவ்வாறு செயல்படுகிறது.
ஒரே ரேசன் கார்டு திட்டம் கொண்டு வரப்பட்டால் ஒரு கிலோ அரிசி ரூ.22.50 பைசாவுக்கு வாங்க வேண்டி இருக்கும். உணவு மானியத்தை ஒழிப்பதே இதன் உண்மையான நோக்கம் எனக் குற்றம்சாட்டினார்.