கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் தமிழ்நாடு சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத்தொடரை சென்னை தலைமைச் செயலகத்தில் நடத்த போதுமான இடவசதி இல்லை என்ற காரணத்தால் வேறிடத்தில் நடத்த அரசு முடிவு செய்தது.
இதற்காக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் மற்றும் சட்டசபை சபாநாயகர் தனபால் ஆகியோர் கலைவாணர் அரங்கில் ஆய்வு நடத்தினர்.
பின்னர் சட்டப்பேரவை கூட்டம் செப்டம்பர் 14 முதல் 15, 16, ஆகிய மூன்று நாட்கள் நடைபெறும் என்று பேரவைத் தலைவர் தனபால் அறிவித்தார்.
அதன்படி செப்டம்பர் 14 தேதி அன்று சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கின் மூன்றாவது தளத்தில் திட்டமிட்டபடி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கூட்டத்தொடர் தொடங்கியது.
கூட்டத்தொடரின் முதல்நாளில் பேரவையில் சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு குறித்து இரங்கல் தீர்மான குறிப்பு வாசிக்கப்பட்டது. பின் கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவல் காரணமாக உயிரிழந்தவர்களுக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கூட்டம் அத்துடன் நிறைவு பெற்றது.
15ஆம் தேதி அன்று அரசினர் அலுவல்கள் குறித்து கூட்டம் நடைபெற்றது. 16ஆம் தேதியன்று துணை நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் 18 சட்டமுன்வடிகள் ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தொடரின் கேள்வி பதில் நேரத்தில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களது தொகுதி சார்ந்த பிரச்னைகளையும், கோரிக்கைகளையும் முன்வைத்தனர். அதற்குத் துறைசார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர்.
இந்நிலையில் இன்று 2020 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிந்ததாக பேரவைச் செயலாளர் சீனிவாசன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "14ஆம் தேதியன்று தொடங்கிய பதினைந்தாவது சட்டப்பேரவையின் ஒன்பதாவது கூட்டத்தொடரை தமிழ்நாடு ஆளுநர், இந்திய அரசமைப்பு பிரிவு 174 ( 2 ) ( ஏ) - கீழ் , 23 ஆம் தேதியன்று இறுதி ( Prorogation) செய்துள்ளார்கள் என்பதைத் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் வருகின்ற 2021 ஆம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் கலைவாணர் அரங்கில் மூன்றாவது தளத்தில் தொடங்கும்.
பின்னர், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நான்கு நாள்கள் நடைபெறும். மேலும், சட்டப்பேரவை பொது தேர்தல் வருவதையொட்டி 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது" என தெரிவித்துள்ளார்.