இந்தோனேசியாவைச் சேர்ந்த ஜெய்லானி, ஷிதி, ரொகானா உள்ளிட்ட 10 பேர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.
அம்மனுவில், " கரோனா ஊரடங்கு காலத்தில் உரிய அனுமதியின்றி பள்ளிவாசலில் தங்கி இருந்ததாக ராமநாதபுரம் மாவட்டம், பட்டினம்காத்தான் விஏஓ கொடுத்த புகாரின்பேரில், கேணிக்கரை காவல்துறையினர் எங்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த வழக்கில் காவல்துறையினர் ராமநாதபுரம் ஜேஎம் 2 மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர்.
எங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்ய வேண்டும். வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும்" என அதில் கோரியிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த மதுரைக் கிளை நீதிமன்ற நீதிபதி ஆர்.பொங்கியப்பன், "மனுதாரர்கள் இந்தோனேசியா நாட்டில் இருந்து இங்கு வந்துள்ளனர். இங்கு மத ரீதியான கருத்தரங்கில் கலந்து கொண்டு உள்ளனர் என்பதை அவர்களே ஒத்து கொள்கின்றனர். எனவே, இவர்கள் மீதான வழக்கு விசாரணையை மாவட்ட நீதிமன்றம் இன்னும் ஒரு வாரத்திற்குள் விரைவாக முடிக்க வேண்டும்" என உத்தரவிட்டார்.