சிவகங்கை மாவட்டம் அரசகுளம் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியராஜ் மகன் அகஸ்டியன் (20), இவரது உறவினரான ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியைச் சேர்ந்த ஜேசுராசு (50), அவரது மகன் பிரான்சிஸ் வல்லரசு (20) ஆகிய மூவரும் அவிநாசியை அடுத்துள்ள காசிகவுண்டன்புதூரில் சேர்ந்து தங்கியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து நீலிபாளையத்தில் உள்ள அய்யன் திருவள்ளுவர் கல்லூரியில் அகஸ்டியன் பி.எஸ்சி. (கணிதம்) இரண்டாம் ஆண்டும், பிரான்சிஸ் வல்லரசு பி.காம். (சிஏ) இரண்டாம் ஆண்டும் படித்துவருகிறார்கள்.
இந்நிலையில், ஜேசுராசு நேற்றிரவு சமையல் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்குத் திரும்பி வந்தபோது அகஸ்டியன் தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த அவிநாசி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், அகஸ்டியனை, பிரான்சிஸ் வல்லரசு கொலை செய்துவிட்டு தப்பியோடியதும், நேற்று மாலை சுமார் 5 மணிக்கே கொலை செய்திருக்கக்கூடும் எனவும், அதன்பின் கொலையாளி தப்பியோடியிருக்கக் கூடும் என்றும் சந்தேகம் கொண்ட காவல் துறையினர் கொலைக்கான காரணம் குறித்து ஜேசுராசுவிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்களும் சோதனை மேற்கொண்டனர். மேலும், தப்பியோடிய பிரான்சிஸ் வல்லரசை பிடிக்க அவரது சொந்த ஊரான தொண்டிக்கு காவல் துறையினரை அனுப்பிவைத்துள்ளனர். மேலும், கொலையாளியை செல்லிடப்பேசி சமிக்ஞை மூலமாகவும் தேடுதல் பணியை காவல் துறையினர் முடுக்கிவிட்டுள்ளனர்.