காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் தாலுக்காவில் உள்ள அரசுத் தொடக்கப்பள்ளியில் புளியரனன் கோட்டை பகுதியைச் சேர்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவி லத்திகா படித்து வருகிறார்.
கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்ய பள்ளி பணியாளரிடமிருந்து சாவியை வாங்கிய மாணவி லத்திகா, அந்த சாவியைத் தொலைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், கோபமடைந்த தலைமை ஆசிரியை தேவி, மாணவி லத்திகாவை தகாத வார்த்தைகளால் திட்டி கடுமையாகத் தாக்கியுள்ளார்.
இதில் மயங்கி விழுந்த மாணவி லத்திகாவை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்கு பதிலாக, மனிதாபிமானம் இல்லாமல் அத்தலைமை ஆசிரியை மீண்டும் கொடூரமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து தகவலறிந்து பள்ளிக்கு வந்த மாணவி லத்திகாவின் தந்தை, அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
மேலும் இது குறித்து காவல் துறையிலும் அவர் புகாரும் அளித்துள்ளார். இதனையடுத்து, மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் மாவட்டக் கல்வி அலுவலரால், தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து செய்தித்தாள் வழியாக அறிந்ததன் அடிப்படையில், மாநில மனித உரிமைகள் ஆணையப் பொறுப்புத் தலைவர் துரை. ஜெயச்சந்திரன் தாமாக முன்வந்து வழக்கு பதிந்தார்.
கடந்த ஓராண்டு காலமாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், தலைமை ஆசிரியையின் செயல் உறுதிப்படுத்தப்பட்டது. அதனடிப்படையில், மனித உரிமை மீறலில் ஈடுபட்ட தலைமை ஆசிரியை 50 ஆயிரம் ரூபாயை பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தையிடம் அபராதமாக ஒப்படைக்க வேண்டும் என்றும், அத்துடன் தலைமை ஆசிரியைமீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.