தெற்கு ரயில்வேயின் தலைமையகத்தில் வணிக மேம்பாட்டு அலகுகள் (பி.டி.யு) உள்ளிட்ட ஆறு பிரிவுகளுடன் ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் மெய்நிகர் மறுஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், ரயில்வேயுடன் வணிகம் செய்வதற்கான செயல்முறையை மென்மையாக்கி சரக்கு வணிகத்தை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக அறிய முடிகிறது.
தெற்கு ரயில்வேயின் சரக்கு மற்றும் பார்சல் வணிகத்தை அதிகரிக்க கூடுதலாக இன்னும் சில புதிய பார்சல் சரக்கு எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டதாக தெற்கு ரயில்வே வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
சரக்கு வாடிக்கையாளர்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் எளிமையாகப் பெற இந்திய ரயில்வே சரக்கு வணிக மேம்பாட்டு இணையதளத்தை (https://www.fois.indianrail.gov.in/RailSAHAY/index.jsp) உருவாக்கியுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு பார்சல்களை சரியான நேரத்தில் வழங்க டெல்லிக்கு அருகிலுள்ள பட்டேல் நகர் மற்றும் கோவைக்கு இடையே நேர அட்டவணை பார்சல் கார்கோ எக்ஸ்பிரஸ் ரயில் சேவை (பிசிஇடி) தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.