தமிழ்நாட்டில் நிரப்பப்படாமல் உள்ள எஸ்.ஐ. பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பைக் கடந்தாண்டு மார்ச் மாதம் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.
இதனையடுத்து, பல்வேறு காரணங்களால் தாமதம் ஏற்பட்டு பின்னர் இந்தாண்டு ஜனவரி 12, 13 ஆகிய இரண்டு நாள்களில் எழுத்துத் தேர்வு நடந்தப்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற இந்த எழுத்துத் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
கடலூர், வேலூர் மாவட்டங்களில் இயங்கிவரும் குறிப்பிட்ட பயிற்சி மையங்களில் படித்து, இந்தத் தேர்வெழுதிய மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சிப் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியானது.
இவர்களில் பெரும்பாலானோர் ஒரே மதிப்பெண் பெற்றுள்ளனர் என்றும் உறுதிப்படுத்தப்பட்டது.
இதன் காரணமாக, முறைகேடுகள் நடைபெற்ற இந்த எழுத்துத் தேர்வை ரத்துசெய்து, புதிதாக தேர்வு நடத்த உத்தரவிட வேண்டுமென கூறி பலர் மதுரைக் கிளையில் மனு செய்திருந்தனர்.
இந்த மனுக்களை ஏற்கெனவே விசாரித்த தனி நீதிபதி, முறைகேடு தொடர்பாக விசாரிக்க வேண்டுமென உத்தரவிட்டார்.
தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து வாடிப்பட்டியைச் சேர்ந்த அசோக்குமார் என்பவர் மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனுவை மதுரை கிளை நீதிமன்ற நீதிபதிகள் என். கிருபாகரன், பி. புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், "நீதிமன்ற உத்தரவின்படி, விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அவ்விசாரணை ஆணையம் தற்போது விசாரணையை மேற்கொண்டு வருகிறது" என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், நியமனம் தொடர்பான தேர்வு நடைமுறைகளை மேற்கொள்ளலாம். ஆனால், விசாரணைக் குழுவின் விசாரணை முடியும் வரை தேர்வானவர்களின் பட்டியலை இறுதி செய்யவோ, பணி நியமனம் மேற்கொள்ளவோ கூடாது. இவை விசாரணை முடிவை பொறுத்தது என உத்தரவிட்டனர்.